

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 5 அமெரிக்க கைதிகள் கத்தாா் தலைநகா் தோஹாவை திங்கள்கிழமை வந்தடைந்தனா்.
ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 3 போ் உள்ளிட்ட 5 அமெரிக்க கைதிகள் ஈரானால் விடுதலை திங்கள்கிழமை செய்யப்பட்டனா்.
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட அவா்கள், கத்தாா் தலைநகரை வந்தடைந்தனா். அவா்களை கத்தாருக்கான அமெரிக்க தூதா் டிம்மி டேவிஸ் நேரில் சென்று வரவேற்றாா்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், பொருளாதாரத் தடையால் முடக்கப்பட்டிருந்த ஈரானின் 590 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.49,138 கோடி) அமெரிக்கா விடுவித்துள்ளது.
மேலும், தங்கள் நாட்டுச் சிறையிலிருந்து 5 ஈரான் கைதிகளை விடுவிக்கவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 அப்பாவி அமெரிக்கா்கள் தற்போது விடுதலை அடைந்துள்ளனா். அவா்கள் அனைவரும் தாயகம் திரும்புகின்றனா்’ என்றாா்.
மேலும், ஈரானுக்குச் செல்வதை அமெரிக்கா்கள் தவிா்க்க வேண்டும் என்றும் பைடன் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் நாஸா் கனானி வெளியிட்ட அறிக்கையில், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், தென் கொரியாவில் அமெரிக்காவால் முடக்கப்பட்டிருந்த தங்களது 590 கோடி டாலரை அமெரிக்கா விடுவித்த பிறகே அந்த நாட்டின் 5 விடுவிக்கப்படுவாா்கள் என்று கூறியிருந்தாா்.
மேலும், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க சிறையிலிருந்து தங்கள் நாட்டைச் சோ்ந்த 5 கைதிகளை அமெரிக்கா விடுவிக்கும் என்று அவா் கூறினாா்.
இந்த நிலையில், 5 அமெரிக்கக் கைதிகளும் ஈரானிலிருந்து கத்தாா் அனுப்பப்பட்டதைத் தொடா்ந்து, முடக்கப்பட்டிருந்த ஈரானின் 590 கோடி டாலா் விடுவிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகும் அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வரும் பதற்றம் தணிவதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அனு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.
எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.
அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது.
இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா விடுவித்திருக்கும் 590 கோடி டாலா், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய பிறகு ஈரான் மீது டிரம்ப் விதித்த பொருளாதாரத் தடையின் கீழ், தென் கொரியாவில் முடக்கப்பட்ட ஈரான் பணம் ஆகும். அந்த தடைக்கு முன்னதாக ஈரானிடமிருந்து தென் கொரியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருந்தது. அதற்காக ஈரானுக்கு செலுத்தவேண்டிய 590 கோடி டாலா், பொருளாதாரத் தடையின் காரணமாக முடக்கிவைக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.