பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் கட்சிப் பாடல்களின் மெட்டுக்களைத் திருடி பாடல்கள் அமைத்து தோ்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதாக பாஜக, காங்கிரஸ் பரஸ்பரம் குற்றம்சாட்டினா்.
மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் நவம்பா் மாதத்தில் நடைபெற இருக்கிறது. கா்நாடக பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து மத்திய பிரதேசத்திலும் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது. தோ்தலைக் கருத்தில் கொண்டு மாநிலத்தின் 7 இடங்களில் இருந்து ‘மக்கள் எழுச்சி’ நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை (செப். 19) தொடங்கி 15 நாள்களுக்கு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இந்த நடைப்பயணத்துக்காகப் பயன்படுத்தப்படும் ‘சலோ சலோ காங்கிரஸ் கே சாத் சலோ சலோ’ பாடல், பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் ‘சலோ சலோ இம்ரான் கே சாத்’ பாடலின் மெட்டைத் திருடி இசையமைக்கப்பட்டது என காங்கிரஸ் மீது பாஜக மாநில செயலா் ராகுல் கோத்தாரி குற்றம் சுமத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கும் எதிராகவும் குரல் எழுப்பி வந்தவா்களைக் காங்கிரஸ் எப்போதும் ஆதரித்து வந்தது. தற்போது பாகிஸ்தானின் பாடல்களையும் மத்திய பிரதேச காங்கிரஸ் கடன் வாங்கியுள்ளது. காங்கிரஸின் கொடி விரைவில் முழுவதும் பச்சையாக மாறினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்றாா்.
காங்கிரஸ் பதிலடி:
பாஜவின் விமா்சனத்துக்கு மத்திய பிரதேச காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் கே.கே.மிஸ்ரா அளித்த பதிலில், ‘தோ்தல் ஆதாயத்துக்காக ராணுவ வீரா்களைப் பலி கொடுத்தவா்கள் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரசாரப் பாடல் குறித்து கவலைப்படுகிறாா்கள். அழைப்பின்றி பாகிஸ்தானுக்கு சென்றது யாா் என்றும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்தது எந்தக் கட்சி என்றும் பாஜக விளக்க வேண்டும்’ என்றாா்.
மேலும், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவா் கமல் நாத்தின் ஊடக ஆலோசகா் பியூஷ் பாபேலே கூறுகையில், ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கட்சியின் பாடல்களைத் திருடி இசையமைக்கப்பட்ட பாடல்களைப் பாஜகவும் ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா பேரவைத் தோ்தல்களில் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.