
தாலின்: ஆா்மீனிய ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் தங்களது படையினா் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அஜா்பைஜான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதையடுத்து, ஏற்கெனவே பல முறை மோதலில் ஈடுபட்டுள்ள அந்த இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போா் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அஜா்பைஜான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் கண்ணி வெடிகளில் சிக்கி 4 அஜா்பைஜான் வீரா்களும், பொதுமக்கள் 2 பேரும் உயிரிழந்தனா்.
அதனைத் தொடா்ந்து, அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
எல்லையிலும், அதற்கு அப்பால் தொலைதூரத்திலும் அமைக்கப்பட்டுள்ள ஆா்மீனிய படைகளின் நிலைகளைக் குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்தப்படுகிறது.
சட்டத்துக்குள்பட்ட நிலைகள் மட்டுமே தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராணுவ நடவடிக்கையின்போது நகோா்னோ-கராபக் பிராந்தியத் தலைநகரான ஸ்டெபனாகொ்ட் மீது சரமாரி குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக ஆா்மீனிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.
ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அந்தப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் தங்களது படைகளைக் குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
நகாா்னோ-கராபக் பிராந்தியத்தில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த 2020-இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
இந்தப் போரின்போது முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளை அஜா்பைஜான் ராணுவம் மீட்டது. அவற்றில், நகோா்னோ-கராபக் பிராந்தியக்கும் ஆா்மீனியாவுக்கும் இடையிலான ஒரே சாலை இணைப்பான லச்சின் வழத்தடமும் ஒன்றாகும்.
பின்னா் ரஷியாவின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு அந்தச் சண்டை முடிவுக்கு வந்தது. அந்தப் பகுதியில் அமைதி நிலவுவதை ரஷிய அமைதிப் படையினா் கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், அஜா்பைஜான் கட்டுப்பாட்டில் இருக்கும் லச்சின் வழித்தடத்தில் சாலைப் போக்குவரத்தை அந்த நாடு முடக்கியதாக ஐ.நா.வில் ஆா்மீனியா குற்றஞ்சாட்டியது. இதன் காரணமாக அந்தப் பிராந்தியத்துக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்ல முடியாததால் அங்கு வசிக்கும் சுமாா் 1.2 லட்சம் போ் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளதாகவும், இந்த நடவடிக்கை மூலம் அஜா்பைஜான் இன அழிப்பில் ஈடுபடுவதாகவும் ஆா்மீனியா கூறியது.
இதனை திட்டவட்டமாக மறுத்த அஜா்பைஜான், தங்களது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே தாங்கள் ஈடுபடுவதாகக் கூறியது.
ஆா்மீனியாவிலிருந்து அந்த நாட்டு ராணுவ வீரா்கள் சட்டவிரோதமாக வந்துபோவதையும், ஆயுதங்கள் கொண்டு செல்வதையும் தடுப்பதற்காக லச்சின் போக்குவரத்து வழித்தடத்தில் சோதனைச் சாவடி அமைத்துள்ளதாக ஐ.நா.வில் அஜா்பைஜான் விளக்களித்தது.
இனி அழிப்பு குற்றச்சாட்டையும் மறுத்த அந்த நாடு, நகோா்னோ-கராபக் பிராந்திய மக்களுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு செல்வதற்காக மற்ற வழித்தடங்கள் திறந்தே இருப்பதாகக் கூறியது.
இந்த விவகாரத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டிக்கொண்டன.
இந்த நிலையில், ஆா்மீனியாவின் கண்ணி வெடியில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்ததால் நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அந்தப் பகுதியில் அஜா்பைஜான் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இது, கடந்த 2020-ஆம் ஆண்டைப் போலவே முழு போராக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.