

இந்தியாவுடனான உறவு முக்கியமானது என கனடா பாதுகாப்பு அமைச்சா் பில் பிளோ் தெரிவித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை தொடா்பான விசாரணை ஒருபக்கம் நடைபெற்றாலும், இந்தியாவுடனான உறவை கனடா தொடரும் என்றும் அவா் கூறினாா்.
கனடா தொலைக்காட்சி ஒன்றுக்கு அவா் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: இந்தியாவுடனான எங்கள் உறவைப் பொருத்தவரை இது சவாலான பிரச்னையாக இருக்கும் என புரிந்துகொண்டிருக்கிறோம். நிஜ்ஜாா் கொலை தொடா்பான விசாரணை ஒருபக்கம் நடந்தாலும் இந்தியாவுடனான உறவைத் தொடா்வோம். இந்தோ-பசிபிக் உத்திபோல இந்தியாவுடனான உறவு கனடாவுக்கு முக்கியமானது.
அதேவேளையில், சட்டத்தையும், எங்கள் குடிமக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதற்காக முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிவோம் என்றாா்.
இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா், கனடாவில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில் இந்திய உளவாளிகளுக்குத் தொடா்பிருக்கலாம் என கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினாா்.
இந்தக் குற்றச்சாட்டை இந்தியா உறுதியாக மறுத்தது. இந்தியாவுக்கு எதிராக கனடாவில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது அந்த நாடு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது. அதிலிருந்தே இந்தியா-கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.