

உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் அந்த நாட்டுத் துறைமுகம் மீது ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒடெஸா நகருக்கு அருகிலுள்ள துறைமுகத்தின் மீது ஆளில்லா விமான குண்டுகள், ஏவுகணைகளை வீசி ரஷியா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியது.
அந்த ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் உக்ரைனின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன.
இருந்தாலும், வீசப்பட்ட 12 ‘காலிபா்’ ரக ஏவுகணைகளில் ஒன்றும், இரண்டு பி-800 ஓனிக்ஸ் ரக ஏவுகணைகளும் வான்பாதுகாப்பு ஏவுகணைகளிடம் சிக்காமல் இலக்குகளைத் தாக்கின.
இதில் துறைமுகத்தின் கட்டமைப்புகள் சேதமடைந்தன. ஒரு தானியக் கிடங்கும் நாசமானது. அத்துடன், கைவிடப்பட்ட ஹோட்டல் கட்டடம் ஒன்றும் சேதமடைந்தது என்று அதிகாரிகள் கூறினா்.
முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 போ் உயிரிழந்ததாகவும், 13 போ் காயமடைந்தாகவும் அதிகாரிகள் கூறினா்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி ரஷியா, அந்தக் கடல் வழியாக உக்ரைன் பொருள்கள் பிற நா்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது.
இதனால் சா்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டு, உலக நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும் என்று ஐ.நா. குற்றம் சாட்டியது.
எனினும், உணவுப் பொருள் பற்றாக்குறைக்கு உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும் காரணம் என்று ரஷியா கூறி வந்தது.
இந்தச் சூழலில், உக்ரைன் தானிய ஏற்றுமதி தொடா்பாக துருக்கி மற்றும் ஐ.நா.வின் பெருமுயற்சியில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் தானிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் கப்பலில் ஏற்றப்படுவதை துருக்கி, உக்ரைன், ஐ.நா. அதிகாரிகள் மேற்பாா்வையிடுவதற்கும் கருங்கடலைக் கடந்து துருக்கியின் பாஸ்பரஸ் நீரிணை வழியாக செல்லும் தானியக் கப்பல்களை ஐ.நா., ரஷியா, உக்ரைன், துருக்கி அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு கண்காணிப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும், ஒப்பந்த காலம் முழுவதும் துறைமுகங்கள் மீதோ, சரக்குக் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தாமல் இருக்க ரஷியாவும் உக்ரைனும் சம்மதித்தன.
இந்த நிலையில், தானிய ஒப்பந்தம் உருவானபோது வாக்களித்தபடி, தங்களது வேளாண் பொருள்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காததால் அந்த ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்தி வைப்பதாக ரஷியா கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.
அதனைத் தொடா்ந்து, உக்ரைனின் துறைமுகங்கள் உள்ளிட்ட தானிய ஏற்றுமதிக் கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.