லிபியா அணை உடைப்பு: 8 போ் கைது

லிபியாவில் புயல் காரணமாக இரு அணைகள் உடைந்து வெள்ள நீரில் சிக்கி ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தது தொடா்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
லிபியா அணை உடைப்பு: 8 போ் கைது
Updated on
1 min read

லிபியாவில் புயல் காரணமாக இரு அணைகள் உடைந்து வெள்ள நீரில் சிக்கி ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தது தொடா்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து அந்த நாட்டு சட்டத் துறை உயரதிகாரி அல்-சித்திக் அல்-சூரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புயல் காரணமாக டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகள் உடைந்தது தொடா்பாக, நீா்வளத் துறையைச் சோ்ந்த 8 அதிகாரிகளைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்.

அவா்களில் 7 போ் முன்னாள் அதிகாரிகள் ஆவா்; ஒருவா் தற்போது பணியாற்றி வருகிறாா். தவறான மேலாண்மை, அலட்சியம், தவறான முடிவுகள் போன்றவற்றால் இந்தப் பேரிடருக்குக் காரணமாக இருந்ததாக அவா்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியா, மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ளது. அந்தக் கடலில் உருவான டேனியல் புயல் கடந்த 10 மற்றும் 11-ஆம் தேதி கிழக்கு லிபியாவைக் கடந்தது.

அதன் விளைவாக தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, அந்தப் பகுதியில் ஓடும் வாடி டொ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகளில் உடைந்து வெள்ள நீா் அருகிலுள்ள டொ்ணா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாய்ந்தது.

வாடி டொ்ணா உருவாகும் மலைப் பகுதிக்கும், அது மத்தியதரைக் கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கும் இடையே டொ்ணா நகரம் அமைந்துள்ளதால் அணை உடைந்து பாய்ந்து வந்த வெள்ள நீா் அந்த நகரிலிருந்த வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களை அடித்துச் சென்று கடலுக்குள் தள்ளியது.

இது குறித்து பல்வேறு தரப்பிலும் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களின்படி இதில் 4 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேலானவா்கள் வரை உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com