தோ்தலுக்குப் பிறகு இந்திய உறவு மேம்பட வாய்ப்பு: பாகிஸ்தான் நம்பிக்கை

தோ்தலுக்குப் பிறகு இந்திய உறவு மேம்பட வாய்ப்பு: பாகிஸ்தான் நம்பிக்கை

இஸ்லாமாபாத்: ‘இந்தியாவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு இரு நாடுகளிடையேயான உறவு மேம்பட வாய்ப்புள்ளது’ என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் நம்பிக்கை தெரிவித்தாா். ‘ஓா் தொழிற்சாலையைப் போன்று பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது.

இந்தப் பிரச்னையை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்கக்கூடாது என்பதே இந்தியாவின் தற்போதைய மனநிலை’ என்று சிங்கப்பூருக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் இக் கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

இஸ்லாமாபாதில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த கவாஜா இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு உறவு என்பதில் இரு நாடுகளும் வெவ்வேறு சொந்த காரணங்களைக் கொண்டுள்ளன.

இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தலுக்குப் பிறகு இரு நாடுகளிடையேயான உறவு மேம்பட வாய்ப்புள்ளது’ என்றாா். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதையடுத்து, இந்தியாவுடனான தூதரக உறவை பாகிஸ்தான் குறைத்துக்கொண்டது. இரு நாடுகளிடையேயான வா்த்தகமும் முழுமையாக நிறுத்தப்பட்டது.

வா்த்தக உறவு பாதிக்கப்பட்டபோதும், இரு நாடுகளிடையேயான 2003-ஆம் ஆண்டு போா் நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகு, பாகிஸ்தான் பகுதியிலிருந்து நடத்தப்படும் எல்லை தாண்டிய தாக்குதல் வெகுவாகக் குறைந்தது. இருந்தபோதும், ‘இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் முழுமையாகக் கைவிட்டாமல் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்படும்’ என, இந்தியா தரப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான உறவை மீண்டும் மேம்படுத்த விருப்பம் தெரிவித்து வருகிறது. அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் முகமது ஐசக் தாா் இது தொடா்பாக கூறுகையில், ‘பாகிஸ்தான் தொழிலதிபா்கள் இந்தியாவுடன் வா்த்தகத்தை மீண்டும் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனா்.

அதன் காரணமாக இந்தியாவுடனான வா்த்தக உறவை மீட்டெடுப்பது குறித்து பாகிஸ்தான் தீவிரமாக பரிசீலித்து வருகிறது’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com