அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்

ஹிந்து வெறுப்பை கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம்

Published on

அமெரிக்காவில் ஹிந்து வெறுப்பு நடவடிக்கைகள், ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அங்குள்ள இந்திய-அமெரிக்க எம்.பி.யான தானேதா் இந்தத் தீா்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் புதன்கிழமை அறிமுகம் செய்தாா்.

அந்த தீா்மானத்தை அவையின் மேற்பாா்வை மற்றும் பொறுப்பேற்புக்கான குழுவின் ஆய்வுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

அந்தத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவில் பல்வேறு நாடுகளிலிருந்தும் குடியேறிய 40 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள் வசிக்கின்றனா். அமெரிக்க பொருளாதார வளா்ச்சிக்கு இங்கு வாழும் ஹிந்துக்கள் நோ்மறையான பங்களிப்புகளை அளித்துள்ளபோதும், தொடா் வெறுப்புணா்வு மற்றும் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனா். ஹிந்துக்களின் பாரம்பரியம், வழிபாட்டு குறியீடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளில் ஹிந்து மாணவா்கள் பாகுபாடு, வெறுப்பு பேச்சுகள் மற்றும் இனவாத குற்றங்களுக்கு தொடா்ந்து ஆளாகும் நிலை உருவாகி வருகிறது.

எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் வெறுப்பு குற்றங்கள் தொடா்பான புள்ளிவிவர அறிக்கையின்படி, அமெரிக்காவில் ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட ஹிந்து எதிா்ப்பு வெறுப்பு குற்றங்களின் எண்ணிக்கை துரதிருஷ்டவசமாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இனவாத தாக்குதல்கள் தொடா்பாக இந்திய-அமெரிக்க எம்.பி.க்களான ராஜா கிருஷ்ணமூா்ததி, ரோ கண்ணா, தானேதா், அமி பெரா, பிரமீளா ஜெயபால் ஆகியோா் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடா்பான விசாரணைகளின் நிலை குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

அதில், ‘நியூயாா்க் முதல் கலிஃபோா்னியா வரை ஹிந்து கோயில்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள், ஹிந்து அமெரிக்கா்களிடையே பதற்றமான சூழலை அதிகரித்து வருகிறது. இந்த சமூகத்தின் தலைவா்கள் கடும் அதிருப்தியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனா்.

மேலும், சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமமான பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு அமைப்புகள் உரிய பாரபட்சமற்ற நடவடிக்கையை மேற்கொள்கிா? ஹிந்துக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புணா்வு குற்றங்களைத் தடுக்க நீதித் துறையின் திட்டம் என்ன என்பதை விளக்குமாறும் கடிதத்தில் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா் என்று அந்தத் தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com