போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

வியட்நாம் போருக்கு எதிரான போராட்டத்தின் போது கைப்பற்றிய ஹாமில்டன் அரங்கை மீண்டும் கொலம்பியா மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமெரிக்க மாணவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கட்டத்தை கைப்பற்றி காவலர்கள் நுழையாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள கொலம்பியா, ஹார்வர்ட், யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் கடந்த இரண்டு வாரங்களாக காஸா மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், பல மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Aaron E. Martinez

இதற்கிடையே போராட்டத்தை தொடர்ந்து வரும் மாணவர்கள் இஸ்ரேல் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகம் போட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்தல், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொது மன்னிப்பு ஆகிய 3 கோரிக்கைகளையும் நிர்வாகத்திடம் மாணவர்கள் வைத்துள்ளனர்.

ஆனால், இஸ்ரேல் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ய முடியாது என்று கொலம்பியா பல்கலைக்கழக தலைவர் மினோச் ஷாபிக் தெரிவித்ததுடன், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி வரை மாணவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள காலக்கெடு விதித்திருந்தார்.

போராட்டத்தை தொடரும் மாணவர்கள் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் அல்லது பல்கலைக்கழகத்தைவிட்டு நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் எச்சரிக்கை மீறி போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Lindsey Wasson

இதனால் பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் அரங்கை செவ்வாய்க்கிழமை அதிகாலை கைப்பற்றிய மாணவர்கள் மேஜைகள், நாற்காலிகள், இரும்பு பொருள்களை நுழைவு வாயிலில் வைத்து காவல்துறையினர் உள்ளே வராதபடி தடுப்புகள் அமைத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும், ஜன்னல்களில் பாலஸ்தீன நாட்டின் கொடிகளையும் பறக்கவிட்டுள்ளனர்.

மேலும், அனைத்து மாணவர்களும் ஹாமில்டன் அரங்குக்கு வருகை தந்து போராட்டத்தில் இணையுமாறு போராட்டக்காரர்கள் இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த 1968-ஆம் ஆண்டில் வியட்நாம் போருக்கு எதிரான போராட்டத்தின்போது ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்களில் ஹாமில்டன் அரங்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

1968-ஆம் ஆண்டில் வியட்நாம் போருக்கு எதிரான போராட்டத்தின் போது.. கோப்புப்படம்
1968-ஆம் ஆண்டில் வியட்நாம் போருக்கு எதிரான போராட்டத்தின் போது.. கோப்புப்படம்Jacob Harris

அதேபோல், மாணவர்களின் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஹாமில்டன் அரங்கைவிட்டு வெளியேற மாட்டோம் என்றும் போராட்டம் தொடரும் என்றும் சமூக ஊடகம் வாயிலாக அறிவித்துள்ளனர்.

மேலும், அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களின் வகுப்பு தொடக்க விழா நெருங்கும் நிலையில், மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர திணறி வருகின்றனர்.

டெக்சாஸ், யூட்டா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தால் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயிலும் யூத மாணவர்களிடையே பதற்றம் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com