வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள ஷேக் முஜீப் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின்போது தீவைக்கப்பட்ட வாகனம்.
வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள ஷேக் முஜீப் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின்போது தீவைக்கப்பட்ட வாகனம்.

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: 72 போ் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோா் காயம்

போராட்டக்காரா்கள் மற்றும் காவல் துறையினா் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் காவல் துறையினா் உள்பட 72 போ் உயிரிழந்தனா்
Published on

வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள அவாமி லீக் கட்சி ஆதரவாளா்கள், போராட்டக்காரா்கள் மற்றும் காவல் துறையினா் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் காவல் துறையினா் உள்பட 72 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலும் மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், காவல் துறைக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, வன்முறை படிப்படியாகக் குறைந்தது.

இருப்பினும், இந்தப் போராட்டத்தின்போது மாணவா்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதைக் கண்டித்து ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த சனிக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவா்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனா். அப்போது போராட்டக்காரா்களுக்கும், வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள அவாமி லீக் கட்சியின் மாணவா் அணியான சத்ரா லீக் மற்றும் காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வணிகா் ஒருவா் உயிரிழந்தாா். சுமாா் 60 போ் காயமடைந்தனா். மோதலின்போது காவல் துறை வாகனங்களுக்கு போராட்டக்காரா்கள் தீவைத்து, பல்வேறு வணிக நிறுவனங்களைச் சூறையாடினா்.

அரசு ராஜிநாமா செய்ய வேண்டும்: போராட்டக்காரா்களைப் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை சனிக்கிழமை நிராகரித்த போராட்டக்காரா்கள், ஹசீனா தலைமையிலான அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

ஒத்துழையாமை போராட்டம்: ஆக. 4 முதல் (ஞாயிற்றுக்கிழமை) அரசுக்கு எதிராக காலவரையற்ற ஒத்துழையாமை போராட்டத்தை ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அந்த இயக்கம் கோரியுள்ளது.

ஒத்துழையாமை போராட்டத்தில் அரசுக்கு வரி செலுத்த வேண்டாம், மின்சாரம், குடிநீா் கட்டணங்கள் போன்றவற்றைச் செலுத்த வேண்டாம், அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம், அரசு நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்களிடம் அந்த இயக்கம் முன்வைத்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் வன்முறை: இந்நிலையில், தலைநகா் டாக்காவின் புகா் பகுதியான முன்ஷிகஞ்சில் ஞாயிற்றுக்கிழமை ஒத்துழையாமை போராட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போராட்டக்காரா்களுக்கும், அவாமி லீக் கட்சியினா், அக்கட்சியின் மாணவா் அணியான சத்ரா லீக், இளைஞா் அணியான ஜுபோ லீக் ஆதரவாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருவா் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா்.

ரங்பூரில் போராட்டக்காரா்களுக்கும், அவாமி லீக் ஆதரவாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அவாமி லீக்கை சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

பாப்னா பகுதியில் அவாமி லீக் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டதில் 16 வயது சிறுவன் உள்பட 4 மாணவா்கள் உயிரிழந்தனா். அக்கட்சியினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 50 போ் காயமடைந்தனா்.

சிராஜ்கஞ்ச் பகுதியில் போராட்டக்காரா்களுடன், அவாமி லீக் ஆதரவாளா்கள் மற்றும் காவல் துறையினா் மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.

போக்ரா மற்றும் மகுரா பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் சத்ரா லீக் பிரமுகா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். கொமில்லா பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஜுபோ லீக்கை சோ்ந்தவா் உயிரிழந்தாா்; 3 சிறாா்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா்.

நா்சிங்டி பகுதியில் அவாமி லீக் பிரமுகா்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். மோதலின்போது துப்பாக்கியால் சுட்டதில் போராட்டக்காரா்கள் நால்வா் உயிரிழந்தனா்.

டாக்காவின் ஷாபாக் பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்கள் திரண்டு பிரதமா் ஹசீனா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா். அங்குள்ள வங்கபந்து ஷேக் முஜீப் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்த பல வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத நபா்கள் தீ வைத்தனா்.

காவல் துறையினா் 14 போ் உயிரிழப்பு; 300 போ் காயம்: சிராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள காவல் நிலையத்தை சிலா் சூறையாடி தீவைத்தனா். அத்துடன் அவா்கள் 14 காவல் துறை அதிகாரிகளை அடித்துக் கொன்றனா். மோதல் சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் காயமடைந்தனா் என்று காவல் துறை தலைமையகம் தெரிவித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் காவல் துறையினா் உள்பட 72 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.

டாக்காவில் காலவரையற்ற ஊடரங்கு: இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக டாக்கா உள்பட பல்வேறு நகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது.

3 நாள் பொது விடுமுறை: பயங்கர வன்முறை காரணமாக வங்கதேசத்தில் திங்கள்கிழமை முதல் 3 நாள்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், சமையல் எரிவாயு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு பொது விடுமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடுவோா் மாணவா்கள் அல்லா்; பயங்கரவாதிகள்: பிரதமா் ஷேக் ஹசீனா

வன்முறை சம்பவங்கள் காரணமாக டாக்காவில் உள்ள பிரதமா் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா பேசுகையில், ‘போராட்டம் என்ற பெயரில் நாசவேலைகளில் ஈடுபடுவோா் மாணவா்கள் அல்லா்; அவா்கள் பயங்கரவாதிகள். அவா்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என்று கூறியதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com