வங்கதேச பிரதமர் பதவியிலிருந்து விலகினார் ஷேக் ஹசீனா
வங்கதேசத்தில் போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகினார். இதையடுத்து அந்நாட்டு அரசை ராணுவம் கைப்பற்றிது.
வங்கதேச போராட்டக்காரா்களைப் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திருந்த நிலையில், அழைப்பை சனிக்கிழமை நிராகரித்த போராட்டக்காரா்கள், ஹசீனா தலைமையிலான அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருந்த நிலையில், நேற்று நடந்த வன்முறையில் 98 பேர் பலியாகினர். இந்நிலையில், பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியிருக்கிறார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்குப் புறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வங்கதேச சட்டத் துறை அமைச்சர் கூறுகையில், இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி, தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால், முன்னெச்சரிக்கையாக, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பிரதமர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஆட்சியில் இருந்த அவாமி லீக் கட்சி ஆதரவாளா்கள், போராட்டக்காரா்கள் மற்றும் காவல் துறையினா் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் காவல் துறையினா் உள்பட 98 போ் பலியாகினர். போராட்டம் தீவிரமடைந்தது.
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, வன்முறை படிப்படியாகக் குறைந்தது.
இருப்பினும், இந்தப் போராட்டத்தின்போது மாணவா்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதைக் கண்டித்து மீண்டும் போராட்டம் வெடித்ததில் 98 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.