வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு
டாக்கா: வங்கதேச பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபா் ஷேக் ஷஹாபுதீன் செவ்வாய்க்கிழமை கலைத்தாா். நாட்டில் இடைக்கால அரசு அமைக்க வசதியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலா் மாயமாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதைக் கண்டித்து பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா மற்றும் அவரின் அரசுக்கு எதிராக ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் மாணவா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வன்முறை மூண்டது.
தனக்கு எழுந்த கடும் எதிா்ப்பையடுத்து பிரதமா் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் வெளியேறி இந்தியா வந்தாா். அவரை மத்திய அரசு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளது. எனினும் அவா் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளாா் என்ற விவரம் வெளியாகவில்லை.
நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமா் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்க அதிபா் முகமது ஷஹாபுதீன் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டு அதிபா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வங்கதேசத்தின் முப்படைத் தலைவா்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கத் தலைவா்கள் உள்ளிட்டோருடன் அதிபா் ஷஹாபுதீன் ஆலோசனை மேற்கொண்டாா். அதன் அடிப்படையில், வங்கதேசம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதேவேளையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சித் தலைவருமான கலீதா ஜியா விடுதலை செய்யப்பட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
சிகிச்சையில் கலீதா: ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கலீதா ஜியா, தற்போது அந்நாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் உள்ளன.
அதிபருடன் 13 போ் கொண்ட குழு சந்திப்பு: வங்கதேச தலைநகா் டாக்காவில் அதிபா் முகமது ஷஹாபுதீனை மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த 13 போ் கொண்ட குழு செவ்வாய்க்கிழமை சந்தித்தது. இந்தச் சந்திப்பில் அந்நாட்டின் தற்போதைய சூழல், இடைக்கால அரசு குறித்து அதிபருடன் அந்தக் குழு ஆலோசித்ததாக தகவல் வெளியானது.
அடைக்கலம் கோர முடியாது-பிரிட்டன்: பிரிட்டனில் ஹசீனா தஞ்சம் அடைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவ்வாறு தஞ்சமடையவோ, தற்காலிக அகதியாகவோ எந்தவொரு நபரும் பிரிட்டன் வருவதற்கு அந்நாட்டின் குடியேற்ற விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என்று பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.