
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பளாராக டிம் வால்ஸ் பெயரை கமலா ஹாரிஸ் இன்று (ஆக. 6) அறிவித்தார்.
அமெரிக்காவில் ஆளும் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்களித்ததால், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதைத் தொடர்ந்து, தற்போது துணை அதிபர் வேட்பாளரை அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பில் இம்முறையும் போட்டியிடுவதாக இருந்த ஜோ பைடன், தேர்தலில் இருந்து விலகினார்.
அவரைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பெயர் முன்மொழியப்பட்டது. பலதரப்பிலிருந்து அவருக்கு ஆதரவு குவிந்த நிலையில், கட்சி பிரதிநிதிகள் வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெற்று ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வமாக அதிபர் வேட்பாளராகியுள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரில் கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளரின் பெயரை கமலா ஹாரிஸ் இன்று (ஆக. 6) அறிவித்தார். அதன்படி மின்னசோட்டா மாகாண கவர்னர் டிம் வால்ஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் துணை அதிபர் வேட்பாளர் பட்டியலில் இருந்த ஜோஷ் ஷேப்பிரோவை முந்தினார்.
60 வயது டிம் வால்ஸ், முன்னாள் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். 2007 - 2019 வரை மின்னசோட்டா மாகாண எம்.பி.யாக இருந்தவர். பின்னர் மின்னசோட்டா கவர்னராக பொறுப்பேற்று, பணியாற்றி வருகிறார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ், ''துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸ் பெயரை அறிவிப்பதில் நான் பெருமை அடைகிறேன். மிகுந்த அரசியல் அனுபவம் கொண்டவர், கவர்னர், பயிற்சியாளர், ஆசிரியர் - உழைக்கும் குடும்பங்களுக்காக உழைத்தவர். அணியில் அவரை சேர்த்துக்கொண்டது மிகவும் சிறப்பானது. ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்'' எனக் குறிப்பிட்டார்.
கமலா ஹாரிஸின் இந்த அறிவிப்பை வரவேற்று பதிவிட்டுள்ள டிம் வால்ஸ், ''பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் உடன் இணைந்து பணியாற்றுவது வாழ்நாள் பெருமை. அரசியலின் சாத்தியதன்மை என்ன என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் காட்டியுள்ளார். இது என் பள்ளி முதல்நாளை நினைவூட்டுகிறது. எனவே, இதை செய்து முடிப்போம், மக்களே! ஒன்றுசேருங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.