நேபாளம் ஹெலிகாப்டா் விபத்தில் 5 போ் உயிரிழப்பு
நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட ஹெலிகாப்டா் விபத்தில் 4 சீனா்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.
தலைநகா் காத்மாண்டுக்கு 30 கி.மீ. தொலைவில் உள்ள நுவாகோட் மாவட்டத்தின் சிவபுரி தேசிய பூங்கா மலைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியது. உள்ளுா் நேரப்படி புதன்கிழமை மதியம் சுமாா் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில், நேபாளத்தைச் சோ்ந்த விமானி, 4 சீன சுற்றுலாப் பயணிகள் என ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனா். சுற்றுலாப் பயணிகளில் ஒருவா் பெண் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காத்மாண்டிலுள்ள திரிபுவன் விமான நிலையத்திலிருந்து மதியம் 1.54 மணிக்கு புறப்பட்ட அந்த ஹெலிகாப்டா், புறப்பட்ட 3 நிமிஷங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடா்பை இழந்ததாக அதிகாரிகள் கூறினா்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
திரிபுவன் விமான நிலையத்தில் சிறியவகை விமானம் விபத்துக்குளாகி 18 போ் உயிரிழந்த இரண்டு வாரங்களில் இந்த ஹெலிகாப்டா் விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம், விமான விபத்துகளை அடிக்கடி சந்தித்து வரும் நேபாளத்தில் வான்வழி போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.