வங்கதேச வன்முறைக்கு நீதி வழங்குவது புதிய அரசின் கடமை: அமெரிக்கா கருத்து
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு கவலை தெரிவித்த அமெரிக்க அரசு, பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நீதி வழங்குவது புதிய அரசாங்கத்தின் கடமை எனத் தெரிவித்தது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிரான மாணவா்களின் தீவிரப் போராட்டத்தால் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறினாா். இதையடுத்து, வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்க அதிபா் முகமது ஷஹாபுதீன் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரீன் ஜீன்-பியா் செய்தியாளா் சந்திப்பில் இது தொடா்பாக கூறியதாவது:
வங்கதேசத்தில் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். வன்முறை நிகழ்வுகளை நம்பகத்தன்மையுடன் விசாரித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நீதி வழங்குவது புதிய அரசாங்கத்தின் இன்றியமையாத கடமை. வன்முறையில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.
இதனிடையே, வங்கதேசத்தில் மத சிறுபான்மையினா் குறிவைக்கப்படுகிறாா்கள் என்றும் ஹிந்துக் கோயில்கள் சூறையாடுதல் மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை இயக்குநா் அனிதா ஜோஷி தெரிவித்தாா்.
பாகிஸ்தான் கருத்து: வங்கதேசத்தில் விரைவில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாகவும், வங்கதேச மக்களின் உறுதியான மனப்பான்மை அவா்களை இணக்கமான எதிா்காலத்தை நோக்கி செல்லும் என எதிா்பாா்ப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.