
வங்கதேசத்தின் பதவியிலிருந்து தூக்கியெறிப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதற்காக இந்தியா பற்றி அந்த நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான தேசிய கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நேரிட்ட அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, தலைநகர் டாக்காவில் இருந்து திங்கள்கிழமை வங்கதேச அவாமி லீக் கட்சியின் தலைவரும், பிரதமராக இருந்தவருமான ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.
வெளியேற்றப்பட்ட பிரதமருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததற்காக அந்தக் கட்சிக்கு எதிரான வங்கதேச தேசியக் கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
1991 ஆம் ஆண்டு வங்கதேச தேசியக் கட்சி ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர் மூத்த செயற்பாட்டாளரான கயேஷ்வர் ராய்.
கட்சியின் உயர்நிலையில் முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கொண்ட நிலைக்குழுவின் உறுப்பினரான கயேஷ்வர் ராய் டாக்காவில் செய்தியாளர்களுடன் பேசுகையில், “இந்தியா - வங்கதேசம் இடையில் ஒரு பரஸ்பர நல்லுறவு இருப்பதை வங்கதேச தேசியக் கட்சி நம்புகிறது. அதை இந்திய அரசாங்கமும் புரிந்து கொண்டிருக்கும் என்பதை நாங்களும் நம்புகிறோம்.
ஆனால், எங்கள் எதிரிக்கு (ஷேக் ஹசீனா) அடைக்கலம் கொடுப்பது அந்த பரஸ்பர நல்லுறவை மேம்படுத்துவதில் தற்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் (ஷேக் ஹசீனாவின் ஆட்சியில்) கடந்த தேர்தலுக்கு முன்னர் வங்கதேசத்தில் ஹசீனா மீண்டும் பிரதமராவதற்கு இந்தியா உதவும் என்றும் கூறியிருந்தார்.
ஷேக் ஹசீனா ஆட்சி அமைப்பதற்கு இந்தியா ஆதரவளித்தது. இதனால், இந்தியா - வங்கதேச மக்களுக்கு இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இந்தியா ஒரு நாட்டை ஆதரிக்க வேண்டுமே தவிர.. ஒரு கட்சியை அல்ல” என்றார்.
ஹிந்துக்கள் மீதான தாக்குதல் பற்றி பதிலளித்த கயேஷ்வர் ராய், “வங்கதேச தேசியக் கட்சி இந்தியாவுக்கு எதிரான ஒருசார்பு கொண்ட கட்சியாகக் கருதப்படுகிறது. ஹிந்துகளுக்கு எதிரானது போல சித்திரிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச தேசியக் கட்சி வங்கதேசத்தில் உள்ள பல்வேறு மதம் மற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் ஆனது. இந்தக் கட்சியின் ஆட்சியில் நான் (இவர் ஒரு ஹிந்து) அமைச்சராக இருந்தேன். இப்போதும் கட்சியின் மிக உயர்ந்த பதவியில் முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறேன். துர்கா பூஜைக்கான நன்கொடைத் திட்டத்தை நான்தான் தொடங்கி வைத்தேன். அந்தத் திட்டத்தை எந்த அரசும் நிறுத்தவில்லை. இப்போதும் நடைமுறையில் தான் இருக்கிறது.
எங்களது நாடு சுதந்திரம் பெறுவதற்கு இந்தியா உதவவில்லை. அதற்காக, நாங்கள் இந்தியாவுக்கு எதிராக இருக்க முடியாது. நாங்கள் ஒரு சிறிய நாடு. இந்தியாவின் உதவி இல்லாமால் தனியாக செயல்பட முடியாது. மருத்துவ உதவிகள், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களுக்கும் இந்தியாவை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதற்காக, வங்கதேச மக்களிடமிருந்து இந்தியா பெறும் தொகையும் சிறியது அல்ல” என்றும் கூறினார்.
புதிய இடைக்கால அரசு அமைந்தது குறித்து கயேஷ்வர் ராய் கூறும்போது, “மாணவர்கள் டாக்டர் முகமது யூனுஸை தலைவராக்கவும், அரசியல் சாராத ஒருவர் தலைமையில் இடைக்கால அரசு அமையவும் விரும்பினர். வங்கதேச தேசியக் கட்சியில் இருந்து யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.