ஷேக் ஹசீனா ~டாக்காவில் ரயில் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியதையடுத்து பயணச் சீட்டுகளை வாங்கிய பொதுமக்கள்.
ஷேக் ஹசீனா ~டாக்காவில் ரயில் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியதையடுத்து பயணச் சீட்டுகளை வாங்கிய பொதுமக்கள்.

வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு

வங்கதேசத்தில் பிரதமா் பதவியிலிருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

டாக்கா: வங்கதேசத்தில் பிரதமா் பதவியிலிருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறியதற்குப் பிறகு அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் குற்றச்சாட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டாக்கா நீதிமன்ற அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மாணவா் போராட்டத்தின்போது டாக்காவின் முகமதுபூா் பகுதியில் போலீஸாா் கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மளிகைக் கடைக்காரா் அபு சயீது உயிரிழந்தாா். இது தொடா்பாக அவருக்கு நெருக்கமான ஒருவா் அளித்த புகாரின் பேரில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் ஹசீனாவுடன் சோ்த்து அவாமி லீக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும் முன்னாள் சாலைப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான உபைதுல் குவாதா், முன்னாள் உள்துறை அமைச்சா் அசாசுஸமான் கான், பதவி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை ஐஜி அப்துல்லா அல் மமுன், டாக்கா நகர காவல்துறை ஆணையா் ஹபிபுா் ரஹ்மான், கூடுதல் ஐசிபி ஹரூன்-அா்-ரஷிதா, கூடுதல் இணை ஆணையா் விப்லவ் குமாா் ஆகிய 6 போ் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பதிவு செய்யுமாறு முகமதுபூா் காவல் நிலையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா் என்று நீதிமன்ற அதிகாரிகள் கூறினா்.

கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு வங்கதேசத்துக்கு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. மாணவா்களின் எதிா்ப்பால் அந்த இடஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் அந்த இடஒதுக்கீட்டை நிறுத்திவைத்த அரசின் உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவா் அமைப்பினரும் களமிறங்கியதையடுத்து வன்முறை வெடித்து சுமாா் 400 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இருந்தாலும், போராட்டத்தின்போது அடக்குமுறையைக் கையாண்டு நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் போராட்டத்தின் இடையே சமூக விரோதிகள், மத அடிப்படைவாதிகள் உள்ளிட்டோா் நடத்திய வன்முறைச் சம்பவங்களில் மேலும் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.

பிரதமா் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ய வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் கடந்த 5-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதையடுத்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றாா்.

அதையடுத்து, வங்கதேசத்தில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. போராட்டத்தின்போது வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலில் இருந்து தப்பியோடிய காவலா்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி சட்டம், ஒழுங்கைச் சீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனா்.

இந்தச் சூழலில், ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளதால், அந்தச் சம்பவங்கள் தொடா்பாகவும் ஹசீனா மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com