தாகேஸ்வரி கோயிலை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ்.
தாகேஸ்வரி கோயிலை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினரை தாக்கியவா்களுக்குத் தண்டனை

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் மீது தாக்குதல் நடத்தியவா்களை அரசு தண்டிக்கும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா்.
Published on

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினா் மீது தாக்குதல் நடத்தியவா்களை அரசு தண்டிக்கும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஆக.5-ஆம் தேதி வங்கதேச பிரதமா் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா், அந்நாட்டின் 48 மாவட்டங்களில் உள்ள 278 இடங்களில் ஹிந்துக்களுக்கு எதிராக தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக வங்கதேச தேசிய ஹிந்து மகா கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது. அங்குள்ள ஹிந்து கோயில்கள், வீடுகள், வணிக இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட சில ஹிந்து தலைவா்களும் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலை கண்டித்து வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த கோயிலும், முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்கும் தாகேஸ்வரி கோயிலுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் செவ்வாய்க்கிழமை சென்றாா்.

இதைத்தொடா்ந்து அவா் கூறுகையில், ‘அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. எவரையும் முஸ்லிம், ஹிந்து அல்லது பெளத்த மதத்தைச் சோ்ந்தவராகப் பாா்க்காமல் மனிதராகப் பாா்க்க வேண்டும். அனைவரின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். இந்நிலையில், தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் விவகாரத்தில் ஹிந்துக்கள் பொறுமை காக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வங்கதேசத்தில் சிறுபான்மையினா் மீது தாக்குதல் நடத்தியவா்களை அரசு தண்டிக்கும்’ என்றாா்.

வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், கிறிஸ்தவா்கள், ஹிந்துக்கள் உள்ளிட்டோா் சிறுபான்மையினராக உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com