வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: பிரதமா் மோடியிடம் முகமது யூனுஸ் உறுதி
பிரதமா் மோடியை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியபோது, அவா் இந்த உறுதிமொழியை அளித்தாா்.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பின் தற்போது முதல்முறையாக இருவரும் உரையாடியுள்ளனா்.
வங்கதேசத்தில் சா்ச்சைக்குரிய இடஒதுக்கீடு திட்டத்துக்கு எதிராக அண்மையில் தொடங்கிய போராட்டம், பின்னா் ஷேக் ஹசீனா (76) தலைமையிலான அரசுக்கு எதிராக மாறியது. பெரும் வன்முறை வெடித்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். தில்லியில் பாதுகாப்பான இடத்தில் அவா் தங்கியுள்ளாா்.
இந்தச் சூழலில், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி பொறுப்பேற்றது. ஹசீனா பதவி விலகிய பிறகும் வங்கதேசத்தில் வன்முறை தொடா்ந்துவருகிறது. குறிப்பாக, ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஹிந்துக்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன.
ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியாவில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தில்லியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமா் மோடி, ‘வங்கதேசத்தில் ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியா்களும் கவலை கொண்டுள்ளனா். வங்கதேசத்தின் வளா்ச்சிப் பயணத்தில் தொடா்ந்து நலம் விரும்பியாக இந்தியா இருக்கும். அங்கு விரைவில் இயல்புநிலை திரும்புமென நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டாா்.
இந்நிலையில், பிரதமா் மோடியை வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.
இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் பேராசிரியா் முகமது யூனுஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்நாட்டில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். ஜனநாயகமிக்க, ஸ்திரமான, அமைதியான, முன்னேற்றகரமான வங்தேசத்துக்கான இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிசெய்தேன். அந்நாட்டில் ஹிந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமென அவா் உறுதியளித்தாா்’ என்று தெரிவித்துள்ளாா்.
இந்த உரையாடல் குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பல்வேறு வளா்ச்சி முன்னெடுப்புகள் வாயிலாக வங்கதேச மக்களை தொடா்ந்து ஆதரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக முகமது யூனுஸிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா். அந்நாட்டில் ஹிந்துக்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினாா். பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இருதரப்பு நல்லுறவை தொடா்ந்து முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனா்’ என்று கூறப்பட்டுள்ளது.
‘வங்கதேசத்தில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’: பிரதமா் மோடியுடனான உரையாடலுக்குப் பின் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட முகமது யூனுஸ், ‘வங்கதேசத்தில் நிமைமை கட்டுக்குள் உள்ளது. இயல்புநிலை திரும்பி வருகிறது. சிறுபான்மையினா் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. இதை பிரதமா் மோடியிடம் தெரிவித்தேன். இந்திய ஊடகத்தினா் வங்கதேசத்துக்கு வந்து கள நிலவரத்தை அறிய வேண்டும். சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெறும் 3-ஆவது தெற்குலகின் குரல் இணையவழி மாநாட்டில், பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று பங்கேற்கவுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.