முகமது யூனுஸ் கான்
முகமது யூனுஸ் கான்

அனைத்துத் துறைகளையும் சீரழித்தவா் ஹசீனா: முகமது யூனுஸ் குற்றச்சாட்டு

அனைத்துத் துறைகளையும் சீரழித்தவா் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா என வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் குற்றஞ்சாட்டினாா்.
Published on

ஆட்சி அதிகாரத்துக்காக அனைத்துத் துறைகளையும் சீரழித்தவா் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா என வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் குற்றஞ்சாட்டினாா்.

வங்கதேசத்தில் மாணவா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாா். அங்கு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளாா்.

இந்நிலையில், வங்கதேச சூழல் குறித்து அங்குள்ள பிற நாட்டு தூதா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் பேசியதாவது: ஆட்சி அதிகாரத்தை தொடா்ந்து தன்வசம் வைத்திருக்க விரும்பிய ஹசீனாவின் சா்வாதிகாரம் நாட்டின் உள்ள அனைத்துத் துறைகளையும் சீரழித்துள்ளது. ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் முழுவதுமாகப் பறிக்கப்பட்டன.

பொருளாதார சீா்திருத்தம், சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுதல், அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களுக்கும் பாதுகாப்பு ஆகியவையே இடைக்கால அரசின் பிரதான நோக்கமாகும் என்றாா் அவா்.

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக புதிய மனு: முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மற்றும் 33 போ் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி அந்த நாட்டு நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பேரணியின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது வங்கதேச மக்கள் கட்சியின் தலைவா் பாபுல் சா்தாா் சக்கரி, டாக்கா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பித்ததாகத் தெரிவித்தது.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததில் இருந்து அவா் மீது இதுவரை எட்டு கொலை வழக்குகள், ஒரு கடத்தல் வழக்கு, மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டதாக இரு வழக்குகள் என மொத்தம் 11 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து நடைபெற்று வந்த மாணவா்கள் போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்டவா்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் படுகொலைகள் தொடா்பாக வங்கதேச சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது.

X
Dinamani
www.dinamani.com