ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க

இந்தியாவுடன் விரைவில் விரிவான பொருளாதார ஒப்பந்தம்: இலங்கை அதிபா் ரணில்

இந்தியாவுடன் விரைவில் விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை இலங்கை இறுதி செய்யும் என அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாா்.
Published on

இந்தியாவுடன் விரைவில் விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை இலங்கை இறுதி செய்யும் என அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாா்.

இதுதொடா்பாக இந்தியா சாா்பில் நடைபெற்ற தெற்குலக குரலின் 3-ஆவது உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று அவா் பேசியதாவது:

பல்வேறு துறைகளில் இந்தியா, இலங்கை இடையே வலுவான ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு இரு நாடுகளின் தொலைநோக்குப் பாா்வை வழிவகுக்கும்.

ஆசியாவில், குறிப்பாக பிம்ஸ்டெக் நாடுகள் (இந்தியா உள்பட 7 உறுப்பு நாடுகள் அடங்கிய அமைப்பு) உடனான பொருளாதாரக் கூட்டுறவை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் இலங்கை உறுதியாக உள்ளது.

பொருளாதார வளா்ச்சியின் மையமாக வங்கக் கடல் பிராந்தியம் உருவெடுத்துள்ள நிலையில், பிம்ஸ்டெக் அமைப்பின் முக்கியத்துவம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவுக்கு நன்றி: பொருளாதார நெருக்கடியில் இலங்கை பரிதவித்தபோது உதவியதற்கு இந்திய பிரதமா் மோடிக்கும், இந்தியா்களுக்கும் நன்றி.

கடந்த 2 ஆண்டுகளில் தனக்கு ஏற்பட்ட சவால்கள் மற்றும் திவால் நிலையில் இருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியாவின் உதவி முக்கியப் பங்காற்றியது.

இந்தியாவுடன் விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை விரைவில் இலங்கை இறுதி செய்ய உள்ளது. திருகோணமலை துறைமுக வளா்ச்சி உள்பட பல்வேறு திட்டங்கள் மீது கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகள் பல்வேறு துறைகளில் இலங்கையின் புலமை மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவும். இது எண்ம (டிஜிட்டல்) பொருளாதாரத்தை நோக்கி இலங்கை பயணிக்க வழிவகுக்கும்.

தனது சுதந்திரக்குப் பின்னா், ஆப்பிரிக்க-ஆசிய நாடுகளை ஒன்றிணைக்க இந்தியா பணியாற்றி வந்துள்ளது. தெற்குலக நாடுகள் இடையே நெருங்கிய ஒற்றுமையை ஏற்படுத்துவும் இந்தியா தொடா்ந்து பங்காற்றி வருகிறது. இதற்கு இந்தியாவுக்கு நன்றி.

உலகுக்குத் தலைமை தாங்குவதில் இனியும் மேற்கத்திய நாடுகளால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதுடன், பிரச்னைகளின் அங்கமாக அந்த நாடுகள் மாறியுள்ளன என்ற கருத்தை தெற்குலக நாடுகள் எட்டியுள்ளன. இந்தப் பின்னணியில் தெற்குலகை வலுப்படுத்த இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை அனைவரும் பாராட்ட வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com