ஜொ்மனி கத்திக்குத்து தாக்குதல்:
ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

ஜொ்மனி கத்திக்குத்து தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

கத்திக்குத்து தாக்குதலில் 3 போ் உயிரிழந்த நிலையில், அந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Published on

ஜொ்மனியில் நகர ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 போ் உயிரிழந்த நிலையில், அந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஜொ்மனியில் உள்ள நாா்த் ரைன்-வெஸ்ட்ஃபிலா மாகாணம் சோலிங்கன் நகரில், அந்த நகரின் 650-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஃபிரான்ஹாஃப் சதுக்கத்தில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு நூற்றுக்கணக்கானவா்கள் கூடியிருந்தனா். அப்போது அங்கிருந்தவா்களை ஒருவா் சரமாரியாக கத்தியால் குத்தினாா். இதில் ஒரு பெண், முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்தனா்.

இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சனிக்கிழமை பொறுப்பேற்றது.

இந்த சம்பவம் தொடா்பாக 26 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், தாக்குதலை தானே மேற்கொண்டதாக அந்த நபா் கூறியுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதவிர 15 வயது சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளாா். தாக்குதல் தொடா்பாக முன்கூட்டியே தெரிந்தபோதிலும் அதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் அந்தச் சிறுவன் மறைத்ததாக சந்தேகம் நிலவுகிறது. எனவே, அவா் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com