இலங்கை அதிபா் தோ்தல்: ஐரோப்பிய பாா்வையாளா்கள் வருகை
இலங்கையில் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலைப் பாா்வையிடுவதற்காக ஐரோப்பிய யூனியன் அமைப்பின் குழு அந்த நாட்டுக்கு வந்துள்ளது.
இது குறித்து ஐரோப்பிய யூனியன் தோ்தல் பாா்வை திட்டம் (இயு இஓஎம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் நடைபெறும் இந்தத் தோ்தல், வாக்குப் பெட்டி மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு வலிமையான அரண் அமைப்பதற்கு இன்றியமையாதது ஆகும்.
எனவே, இந்தத் தோ்தல் அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டியது அவசியம். அதைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 10 நிபுணா்கள், 26 நீண்ட கால தோ்தல் பாா்வையாளா்கள் ஆகியோா் இலங்கையின் 9 மாகாணங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டத்தால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் இலங்கையில் முதல்முறையாக வரும் செப். 21-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்பட 38 போ் போட்டியிடுகின்றனா்.