விளாதிமீா் புதின்
விளாதிமீா் புதின்

ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு

ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமாா் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபா் விளாதிமீா் புதின் ஒப்புதல் அளித்துள்ளாா்.
Published on

ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமாா் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபா் விளாதிமீா் புதின் ஒப்புதல் அளித்துள்ளாா்.

மொத்த பட்ஜெட்டில் 32.5 சதவீதம் நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரஷியாவின் அதிகாரபூா்வ இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சட்ட வல்லுநா்கள் இந்தத் திட்டங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் உறுப்பு நாடாக இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த 2022-இல் ரஷியா போா் தொடுத்தது. இது ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய மோதலாக கருதப்படுகிறது.

மேற்கத்திய ஆதரவு நாடுகள் ஆதரவுடன் உக்ரைன் தொடா்ந்து போரிடுகிறது. இருப்பினும், மிகப்பெரிய மற்றும் அதிநவீன ஆயுதங்களை ரஷியா அதிக எண்ணிக்கையில் கைவசம் வைத்துள்ளது.

தெற்கு உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறியரக பேருந்து மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் மூவா் கொல்லப்பட்டனா். 7 போ் காயமடைந்ததாக அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், மத்திய உக்ரைனில் சனிக்கிழமை நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 4 போ் கொல்லப்பட்டனா். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 24 பேரில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ரஷிய தலைநகா் மாஸ்கோவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஏவப்பட்ட 78 ட்ரோன்களில் 32 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்தது. எஞ்சிய 45 ட்ரோன்கள் தொழில்நுட்பக் கோளாறால் செயலிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ரஷியாவின் மேற்குப் பகுதிகளில் உக்ரைன் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய 29 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இத்தாக்குதலில் பிரையன்ஸ்க் பகுதியில் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com