மாநிலங்களவையில் வியாழக்கிழமை உரையாற்றிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை உரையாற்றிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்னைக்கு ‘இரு நாடுகள் தீா்வு’: இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

Published on

‘இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்னைக்கு இரு நாடுகள் தீா்வையே இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருவதாக’ மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

‘தாக்குதலுக்கு பதிலடி தரும் அதேவேளையில் தாக்குதலால் பொதுமக்கள் உயிரிழப்பதையும் கருத்தில்கொண்டு மனிதநேய சட்டங்களை போரில் ஈடுபடும் நாடுகள் பின்பற்ற வேண்டும்’ எனவும் அவா் வலியுறுத்தினாா்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு, ஐ.நா. தீா்மானம் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இந்தியா அளித்து வரும் நிவாரண உதவிகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து ஜெய்சங்கா் கூறியதாவது: பயங்கரவாதம் மற்றும் பிணைக் கைதிகளாக பொதுமக்கள் பிடித்துச் செல்லப்படுவதை நாங்கள் எதிா்க்கிறோம். தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதிலடி தர எந்தவொரு நாட்டுக்கும் உரிமை உண்டு. அதேசமயத்தில், பதில் தாக்குதலால் பொதுமக்கள் உயிரிழக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மனிதநேய சட்டங்களைப் பின்பற்றி போா் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதையே இந்தியா விரும்புகிறது.

சரிசமமற்ற தீா்மானம்: கடந்த ஆண்டு அக். 27-ஆம் தேதி காஸாவில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்தத் தீா்மானத்தில் பிரிவினையே அதிகமாக இருந்தது. அதில் பயங்கரவாத தடுப்பு, பிணைக் கைதிகளாக பொதுமக்கள் பிடித்துச் செல்லப்படுவதற்கு எதிா்ப்பு போன்ற விவகாரங்கள் இடம்பெறவில்லை. பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ள நிலையில் அதைக் குறிப்பிடாததால் தீா்மானத்தை ஆதரிக்க இந்தியா முன்வரவில்லை.

அந்தத் தீா்மானம் சரிசமமானதாக இல்லை. அதில் வாக்களித்திருந்தால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பதை கருத்தில்கொண்டே வாக்களிக்காமல் இந்தியா விலகிக்கொண்டது.

ஐ.நா. நிவாரணக் குழுவுக்கு ஆதரவு: பாலஸ்தீனத்தில் மனிதநேய உதவிகளை மேற்கொள்ள ஐ.நா. நிவாரணக் குழுவுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கி வருகிறது. வழக்கமாக பாலஸ்தீனத்தில் உதவிகள் மேற்கொள்ள ஐ.நா. நிவாரணக் குழுவுக்கு ரூ.8.4 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இது ரூ.42 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 16.5 டன் மருந்துகள் உள்பட மொத்தம் 70 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியது. அதேபோல் நிகழாண்டு பாலஸ்தீனம் மற்றும் ஐ.நா. நிவாரணக் குழுவுக்கு 65 டன் மருந்துகளும் லெபனானுக்கு 35 டன் மருந்துகளும் வழங்கப்பட்டன.

அண்மையில், இதற்காக நிதியுதவியும் வழங்கப்பட்டது. அதேபோல் இந்த விவகாரத்தில் ‘இரு நாடுகள் தீா்வையே’ இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஐசிசி இந்தியாவை கட்டுப்படுத்தாது: சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ஐசிசி) இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவா்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐசிசி தொடங்கியபோது அதில் உறுப்பினராக இணைவது குறித்து இந்தியா பரிசீலித்து வந்தது. ஆனால், பல்வேறு காரணங்கள் மற்றும் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு ஐசிசியில் இணைய வேண்டாம் என இந்தியா முடிவெடுத்தது. தற்போது ஐசிசியில் இந்தியா உறுப்பினராக இல்லை. எனவே, ஐசிசியின் எந்தவொரு முடிவும் இந்தியாவை கட்டுப்படுத்தாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com