
பிரேஸில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருந்த நிலையில், அவருக்கு சா பாலோ நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
79 வயதான டா சில்வா கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தலைநகர் பிரேஸிலியாவில் உள்ள அதிபர் மாளிகையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் உண்டானது. வெட்டுக்காயம் காரணமாக அவருக்கு தலையில் தையல் போடப்பட்டது. இதனையடுத்து அந்த மாதம் ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை தலைவலி அதிகரித்ததன் காரணமாக அவர் பிரேஸிலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவருக்கு சிரியன்-லெபானீஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை(டிச.9) இரவு மூளையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பிரேஸில் அதிபர் சிகிச்சை பெற்று வரும் சிரியன்-லெபானீஸ் மருத்துவமனை தரப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியதே அவர் திடீரென மயக்கமடைவதற்கான காரணமெனவும், தற்போது லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.