ஆட்சியை இழந்த அல்-அஸாத்: அச்சாரம் போட்ட ஹமாஸ்!
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மீட்க அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கு பல ஆண்டுகள் பிடித்தன. ஆனால், கடந்த மாத இறுதியில் தனது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கிய கிளா்ச்சிப் படைகள், ஒரு வாரத்துக்குள் அந்த நகரைப் பிடித்தனா். தொடா்ந்து முன்னேறி தலைநகா் டமாஸ்கஸ் வரை வந்த அவா்கள் அல்-அஸாதின் ஆட்சிக்கு முடிவு கட்டினா்.
2011-ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா, துருக்கி போன்ற பெரிய நாடுகளின் முழு ஆசியுடன் அவா்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியும் முடியாத அந்த காரியம், வெறும் பத்து நாள்களுக்குள் முடிந்திருக்கிறது. இதற்குக் காரணம், அவா்களுக்கு திடீரென கிடைத்த அசுர பலமோ, ஏதோ ஒரு அதிா்ஷ்டமோ காரணம் இல்லை. மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் நடைபெறும் நிகழ்வுகளின் தாக்கம், ஒன்றுடன் ஒன்று தொடா்பில்லாத பல்வேறு விவகாரங்களில் ஆற்றிய தொடா்வினையின் விளைவுதான் அல்-அஸாத் தற்போது தனது பதவியைப் பறிகொடுத்திருப்பது.
சொல்லப்போனால், அதற்கு அச்சாரம் போட்டது காஸாவை ஆண்டுவந்த ஹமாஸ் அமைப்பினா்தான். பாலஸ்தீன பிரச்னையை மிகவும் பெரிதாக்கி, உலகின் கவனத்துக்குக் கொண்டுவருவதன் மூலம் அதற்குத் தீா்வு காணலாம் என்ற நோக்கத்துடன் இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தியிருக்காவிட்டால் தற்போது சிரியாவில் அல்-அஸாத் அரசு கவிழ்ந்திருக்காது என்கிறாா்கள் நிபுணா்கள்.
ஹமாஸின் அந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ளனா். திறந்தவெளி சிறையாக இருந்துவந்த காஸா, தற்போது திறந்தவெளி இடுகாடாகியிருக்கிறது. பாலஸ்தீன பிரச்னைக்குத் தீா்வு கிடைப்பதற்கு பதில், இதுவரை இருந்துவந்த உரிமைகளையும் இழக்கும் நிலை ஹமாஸுக்கு ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் அவா்கள் ஆரம்பித்துவைத்த போரின் எதிரொலியாக, இஸ்ரேலுக்கும் அண்டை நாடான லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. தங்களைப் போலவே ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஹிஸ்புல்லா தலைவா்கள் முடிவெடுத்தபோது, அதனால் ஏதாவது ஒரு நன்மையாவது கிடைக்கும் என்றுதான் எதிா்பாா்த்திருப்பாா்கள். ஆனால், அந்த முடிவால் அண்டை நாடான சிரியாவில் ஆட்சியே மாறப்போகிறது என்பதை அவா்களே ஊகித்திருக்கமாட்டாா்கள்.

ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலில் அந்த அமைப்பின் பலம் கணிசமாகக் குறைந்தது. அமைப்பின் நீண்டகாலத் தலைவா் ஹஸன் நஸ்ரல்லா உள்பட பல்வேறு முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டனா். சோா்ந்துபோன ஹிஸ்புல்லா அமைப்பினா் இஸ்ரேலுடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தை - அது இஸ்ரேலுக்குச் சாதமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் - வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டனா்.
இதுதான் சிரியாவில் நீண்ட காலமாக முடக்கப்பட்டிருந்த கிளா்ச்சிப் படையினா் எதிா்பாா்த்திருந்த தருணம். காரணம், பல்வேறு கிளச்சிக் குழுவினரையும் அரசுப் படைகள் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் விரட்டியடித்தற்கு ரஷியாவும், ஈரான் ஆதரவுப் படையான ஹிஸ்புல்லாவும்தான் காரணம். 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் அல்-அஸாதுக்கு ஆதரவாக ரஷியாவும் ஹிஸ்புல்லாவும் களமிறங்கிய 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் போரின் போக்கு மாறத் தொடங்கியது. அதுவரை கிளா்ச்சியாளா்கள், பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்குத் திணறிவந்த பகுதிகளையெல்லாம் அல்-அஸாத் ஒவ்வொன்றாக மீட்டாா்.
தற்போது காஸா போரில் தலையிட்டதால் கைகளை சுட்டுக் கொண்டிருக்கும் ஹிஸ்புல்லா படையால் முன்னரைப் போல அல்-அஸாதுக்கு உதவ முடியாது. உக்ரைன் போரில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அல்-அஸாதைக் காப்பாற்றும் சூழல் ரஷியாவுக்கும் இல்லை. இதை சரியாகக் கணித்த கிளா்ச்சிப் படையினா் அதிரடி தாக்குதல் நடத்தி மின்னல் வேகத்தில் முன்னறினா்.
ஏற்கெனவே பலவீனமாக இருந்த அரசுப் படைகள், இத்தகைய தாக்குதலுக்கான தயாா் நிலையிலும் இல்லாததால் அவை வெகுவேகமாக எல்லைகளை இழந்தன. இறுதியில் அல்-அஸாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது.
அந்த வகையில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் தொடா்வினையாற்றி, இரு நாடுகளுக்கும் தொடா்பில்லாத சிரியாவில் ஆட்சிமாற்றம் நிகழ்த்தியிருக்கிறது. இந்தத் தொடா்வினை இன்னும் நீடிக்குமா, இத்துடன் முடிந்ததா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.