
அஜர்பைஜான் விமான விபத்துக்கு பறவை காரணமாக இருக்கலாம் என ரஷிய அமைப்பு தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(டிச. 26) புறப்பட்ட நிலையில், கஜகஸ்தான் அக்தாவ் விமான நிலையத்திற்கு அருகே தரையிறங்கும்போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
இதில் 62 பயணிகள் மற்றும் விமானி உள்பட 5 பணியாளர்கள் என 67 பேர் இருந்தனர். இந்த விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளதாகவும் இரண்டு குழந்தைகள் உள்பட 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கஜகஸ்தான் அரசு தகவல் வெளியிட்டுள்ளது. சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது? காரணம்?
அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட விமானம் எம்ப்ரேயர் 190(விமான எண் J2-8243) மோசமான வானிலை காரணமாக கஜகஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. காஸ்பியன் கடலின் கிழக்குக் கரையில் கஜகஸ்தானில் உள்ள அக்தாவ் நகரிலிருந்து சுமார் 3 கிமீ (1.8 மைல்) தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையத்திற்கு அருகே வரும்போது அவசரமாக தரையிறக்க விமானி கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு தரையிறங்கும்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியதாகவும் விமானம் தரையிறங்குவதற்கு முன் வானில் சிறிது நேரம் வட்டமடித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதால் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக ரஷியாவின் விமான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
விமானம் விபத்துக்கு முன் வேறு விமான நிலையத்தில் தரையிறங்குமாறு விமானி கோரியுள்ளார். ஆனால் கடும் பனி மூட்டம் காரணமாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாகவே விமானத்தில் உள்ள ஆக்சிஜன் டேங்க் ஒன்று உடைந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும் இதுகுறித்த விசாரணை முடியும் வரை பாகு - க்ரோஸ்னி மற்றும் பாகு - மகச்சலா இடையேயான அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைப்பதாக அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.