பாகிஸ்தான் எல்லையில் தலிபான்கள் தொடா் தாக்குதல்
பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஆப்கானிஸ்தானின் தலிபான் படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 11 வீரா்கள் காயமடைந்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் எல்லையில் இரு பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் கைப்பற்றிவிட்டதாகவும், பாகிஸ்தான் வீரா்கள் பலரைக் கொன்றுவிட்டதாகவும் தலிபான்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது இரு நாட்டு எல்லையில் போா்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பாக்திகா மாகாணத்தில் தெஹ்ரிக்- ஏ- தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் பதுங்குமிடங்கள் மீது பாகிஸ்தான் கடந்த செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 27 பெண்கள், குழந்தைகள் உள்பட 47 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி அளிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான தலிபான்கள், பாகிஸ்தான் எல்லையில் குவிந்து அந்நாட்டு ராணுவத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
இது தொடா்பாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் கூறப்பட்டதாவது: கோஷிகாரி, மாதா சாகா், கோட் ராகா, டெரி மெங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை தலிபான்கள் வீசியும் தாக்குதல் நடத்தினா். இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டது. இதில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் உயிரிழந்தாா். மேலும் 11 வீரா்கள் காயமடைந்தனா். அதே நேரத்தில் தலிபான் படையில் 8 முதல் 10 போ் வரை உயிரிழந்துவிட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனா். அந்த ஆட்சியை முதலில் அங்கீகரித்த நாடு பாகிஸ்தான் என்றாலும், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் தெஹ்ரிக்-ஏ- தலிபான் பாகிஸ்தான் அமைப்பினா் பாகிஸ்தான் ராணுவம் மீது தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இவா்கள் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்தே செயல்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு தலிபான் ஆட்சியாளா்கள் உதவி வருகின்றனா்.
இதனால், ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து, இப்போது இரு நாடுகளுக்கு இடையே போா்ப் பதற்றத்துக்கு வித்திட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளுமே கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிா்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அந்நாட்டு மக்களின் நிலைமை மேலும் மோசமாகும் என சா்வதேச அரசியல் வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.