அபுதாபியில் முதல் ஹிந்து கோயில்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
அபுதாபியில் முதல் ஹிந்து  கோயில்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை-அபுதாபி ஷேக் சையத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவுக்கு அருகில் உள்ள அபு முரைகாவில், அந்நாட்டு அரசு நன்கொடையாக அளித்த 27 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.700 கோடி செலவில் பிரம்மாண்டமான ஹிந்து கோயில் கட்டப்பட்டுள்ளது.

"பிஏஎப்எஸ்' சுவாமிநாராயண் சம்ஸ்தாவால் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைத்து, சிறப்பு பூஜைகளில் பங்கேற்று சிறப்பித்தார்.

கோயில் சிறப்பம்சங்கள்: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள, இந்த முதல் ஹிந்து கோயிலின் சிறப்பம்சங்கள் குறித்து அதன் கட்டுமானத்தில் தொடர்புடையவர்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருப்பதாவது: ஹிந்து கோயில் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துக்கான கலையை விவரிக்கும் இந்திய வாஸ்து பாரம்பரிய கட்டுமான அறிவியலின்படி கோயில் கட்டப்பட்டுள்ளது.

கோயில் கட்டுமானத்தில் உலோகம் பயன்படுத்தப்படவில்லை. கோயில் அடித்தளத்தில் நிரப்புவதற்கான கான்கிரீட் கலவையில் 55 சதவீத சிமென்ட் பயன்பாட்டைத் தவிர்க்க, சாம்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் தீவிர வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு நானோ டைல்ஸ் மற்றும் தடிமனான கண்ணாடிகளைப் பயன்படுத்தியுள்ளோம்.

இந்தியாவின் பங்களிப்பு: ராஜஸ்தானில் இருந்து 18 லட்சம் செங்கற்கள், 1.8 லட்சம் கன மீட்டர் பளிங்குக்கல் அபுதாபிக்கு கொண்டு வரப்பட்டு, அயோத்தி ராமர் கோயிலைப் போன்றே நாகரா கட்டட கலையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

ராஜஸ்தானிலேயே 20,000 டன் பளிங்கு கற்கள் செதுக்கப்பட்டு, 700 கன்டெய்னரில் அபுதாபிக்கு கொண்டு வரப்பட்டன. இத்தாலியில் இருந்து வெட்டி கொண்டுவரப்பட்ட பளிங்கு கற்களும் இந்தியாவிலேயே செதுக்கப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டனர்.

அமீரக கலாசார தொடர்பு: ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 அமீரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 கோபுரங்கள், தேசிய பறவையான பருந்து மற்றும் ஒட்டகம் ஆகியவற்றின் சிற்பங்கள் கோயிலில் இடம்பெற்றுள்ளது.

7 கோபுரங்களில் ஸ்ரீராமர், சிவபெருமான், ஜெகந்நாதர், கிருஷ்ணர், கிருஷ்ணரின் மறு அவதாரமாகக் கருதப்படும் சுவாமிநாராயண், திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட 7 முக்கிய தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

108 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே கலாசார ஒருங்கிணைப்புக்கு வழி வகுக்கும் என்றனர்.

துபையில் மேலும் 3 ஹிந்து கோயில்கள் இருந்தாலும் தற்போதைய சுவாமிநாராயண் கோயில், கல் கட்டட கலையுடன் 27 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, வளைகுடா பிராந்தியத்தின் மிகப் பெரிய கோயிலாகத் திகழ்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com