நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்: காஸா போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு

நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்: காஸா போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு

நியூயார்க்: காஸா விவகாரத்தில் இதுவரை கடைப்பிடித்து வந்த நிலைப்பாட்டிலிருந்து திடீரென மாறி, அந்தப் பகுதியில் தற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரவுள்ளது.

இதுவரை காஸா தொடர்பாக கொண்டு வரப்படும் தீர்மானங்களில் "போர் நிறுத்தம்' என்ற வார்த்தையை அமெரிக்கா தவிர்த்து வந்தது.

ஆனால், அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் அண்மைக்காலமாக வெளியிடும் அறிக்கைகளில், காஸாவில் இஸ்ரேல் வரம்பு மீறி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டி வருகிறார். மேலும், அங்கு சண்டை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் கூறி வருகிறார்.

இந்த நிலையில், பைடனின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், காஸாவில் தற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா தயாரித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான தீர்மான வரைவில், பொதுமக்கள் நெருக்கம் நிறைந்த காஸாவின் ராஃபாவில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீட்டியுள்ள திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். மேலும், அங்கிருந்து சுமார் 240 பேரை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தப் பகுதியின் தலைநகர் காஸா சிட்டி உள்ளிட்ட வடக்கு காஸாவில் கடுமையான தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அங்கிருந்து தெற்கு காஸாவுக்கு பொதுமக்கள் இடம் பெயர வேண்டும் என்று உத்தரவிட்டது. அதையடுத்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தெற்கு நோக்கி வந்தனர். இதற்கிடையே, வடக்கு காஸாவில் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி முன்னேறிய ராணுவம், அங்கு ஹமாஸ் நிலைகளை அழித்ததுடன், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டும் தங்களது இலக்கை அடைவதற்காக தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதல் தீவிரத்தை அதிகரித்தது.

கான் யூனிஸ் உள்ளிட்ட தெற்கு நகரங்கள் மட்டுமில்லாமல், எகிப்து எல்லையையொட்டி அமைந்துள்ள கடைக்கோடி நகரான ராஃபாவிலும் இஸ்ரேல் படையினர் தீவிர குண்டுவீச்சு நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்தச் சூழலில், காஸாவின் பிற பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த பொதுமக்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபா நகரிலும் தரைவழித் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் கடந்த வாரம் அறிவித்து அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

அந்தப் பகுதியில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அது மிகப் பெரிய மனிதப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா.வும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன. இருந்தாலும், தங்கள் நாட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரும் வரும் ரமலான் மாதத் தொடக்கத்துக்கு முன்னர் விடுவிக்கப்படாவிட்டால் ராஃபாவில் தரைவழித் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் அண்மையில் கெடு விதித்தது.

இந்தச் சூழலில், காஸாவில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், ராஃபா நகரில் தரை வழித் தாக்குதல் கூடாது எனவும் வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா தயார் செய்துவருகிறது.

29,195-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸா சிட்டி, பிப். 20: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 4 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,195-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 103 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, அந்தப் பகுதியில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,195-ஆக அதிகரித்துள்ளது. தாக்குதலில் இதுவரை 69,170-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.

அல்ஜீரியா தீர்மானத்துக்கு "வீட்டோ'

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா தயாரித்து வந்தாலும், அந்தப் பகுதியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள உதவியாக அங்கு சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அல்ஜீரியா செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தது.

பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளில் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. வாக்கெடுப்பை பிரிட்டன் புறக்கணித்தது. இதன் மூலம், காஸாவில் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஏறத்தாழ அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இருந்தாலும், அமெரிக்காவின் "வீட்டோ'வால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படமுடியாமல் போனது.

இந்தத் தீர்மானத்தையும் சேர்த்து, காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இதுவரை கொண்டு வரப்பட்ட 3 தீர்மானங்களை அமெரிக்கா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com