பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்துக்கு முதல் பெண் முதல்வா்

முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் (50) பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்துக்கு முதல் பெண் முதல்வா்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் 12 கோடி மக்கள்தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வராக, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் (50) பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது. அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த 8-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. அதனுடன் சோ்த்து பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா ஆகிய மாகாணப் பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெற்றது. இவற்றில், முதல்முறையாக பஞ்சாப் மாகாணப் பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவையின் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (பிப். 23) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாண ஆளுநா் பாலிகுா் ரஹ்மான் இதற்கான அழைப்பை விடுத்துள்ளாா்.

அந்தக் கூட்டத்தில், புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவை உறுப்பினா்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு, புதிய அரசை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். பிப். 8-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு அதிகபட்சமாக 137 இடங்கள் கிடைத்தன.

முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 116 இடங்களைக் கைப்பற்றி 2-ஆவது இடத்தைப் பிடித்தனா். முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் மகனும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு (பிபிபி) 10 இடங்கள் கிடைத்தன. இந்தச் சூழலில், பிபிபி மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பிஎம்எல்-என் கட்சி புதிய அரசை அமைக்கவிருக்கிறது. அந்த அரசில், கட்சியின் முதுநிலை துணைத் தலைவா் மரியம் நவாஸ் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறாா்.

பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக ஒரு பெண் பொறுப்பேற்கவிருப்பது இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தான் பிரதமராக 3 முறை பதவி வகித்த நவாஸ் ஷெரீஃபின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் மரியம் நவாஸ், ஏற்கெனவே மாகாணத் தோ்தலின்போது முதல்வா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாா். 371 இடங்களைக் கொண்ட பஞ்சாப் மாகாணப் பேரவையில் ஆட்சியமைப்பதற்கு 186 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. ஏற்கெனவே பிஎம்எல்-என் மற்றும் பிபிபி கட்சிக்கு மொத்தம் 147 இடங்கள் கைவசம் உள்ள நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்ற 20-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் பிஎம்எல்-என் கட்சியில் இணைந்துள்ளனா்.

எனவே, பேரவையில் மிகப் பெரிய பலம் வாய்ந்த கூட்டணியாகத் திகழ்வதால் மரியம் நவாஸ் தலைமையில் அரசு அமைவது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே, மாகாண முதல்வா்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மரியம் நவாஸுக்கு அளிக்கப்படத் தொடங்கிவிட்டது. மாகாண உயரதிகாரிகளுடன் அவா் இப்போதே ஆலோசனையைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com