

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான ஜாஹ்னவி கண்டுலா என்ற இளம்பெண், அமெரிக்காவின் சியாட்டில் நகரிலுள்ள ‘நார்த் ஈஸ்டெர்ன்’ பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் தேதி, சியாட்டில் நகரில் சாலையை கடக்க முற்பட்டபோது அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த காவல்துறை ரோந்து வாகனம் மோதியதில் மாணவி ஜாஹ்னவி கண்டுலா 100 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தன்று வாகனத்தை இயக்கிய காவல்துறை அதிகாரி கெவின் டேவ், அதிவேகமாக, 100 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக, வாகனத்தை ஓட்டியதே இந்த கோர விபத்துக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதிவேகமாக வாகனத்தை இயக்கும் போது, சாலையில் செல்லும் பயணிகளை எச்சரிக்கும் வகையில் வாகனத்தின் சைரன் ஒலிக்கப்படவில்லை என்பதும், முகப்பு விளக்குகள் எரியப்படாததால், இவற்றை கவனிக்காத மாணவி ஜாஹ்னவி கண்டுலா, சாலையை கடக்க முயன்றபோது மாணவி கண் இமைக்கும் நேரத்திற்குள் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விபத்து தொடர்பான, கண்காணிப்புக் கேமரா காட்சிகள் சில, சியாட்டில் நகர காவல்துறையால் வெளியிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், கார் மோதி மாணவி தூக்கி வீசப்பட்ட காட்சிகளை, காவல்துறை அதிகாரி ஒருவர் சிரித்து ரசித்தபடியே பார்ப்பது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரியின் கார் மோதி இந்திய மாணவி ஜாஹ்னவி கண்டுலா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரி மீது இதுவரை சட்டரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றம் தொடர்பாக அதிகாரி டேவிக்கு எதிராக போதிய ஆதாரம் எதுவுமில்லை என்று கூறிய அதிகாரிகள், மாணவி ஜாஹ்னவி கண்டுலாவின் மரணத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரி கெவின் டேவ் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்றும் கடந்த 21-ஆம் தேதியன்று தெரிவித்தனர்.
காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த விளக்கம், மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, விபத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள இந்திய தூதரகம் தரப்பில், மாணவி ஜாஹ்னவி கண்டுலா கொல்லப்பட்ட விவகாரம் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கின் விசாரனை நடைபெற்று வருவதாகவும் இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்தோடு தொடர்ந்து தொடர்பிலிருப்பதாகவும், மாணவி ஜாஹ்னவி கண்டுலாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க அனைத்து விதத்திலும் தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது சியாட்டில் நகர அட்டர்னி அலுவலகத்தில் விசாரணைக்காக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை நிர்வாகம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை முழுமையாக நிறைவடையும் வரை காத்திருப்பதாகவும், தொடர்ந்து வழக்கின் விசாரணை நகர்வை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.