அடுத்த வாரத்தில் காஸா ஒப்பந்தம்: பைடன் நம்பிக்கை

அடுத்த வாரத்தில் காஸா ஒப்பந்தம்: பைடன் நம்பிக்கை

வாஷிங்டன்: காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நிறுத்தம் அடுத்த வாரத்தில் ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஸாவில் சண்டையை நிறுத்துவதற்காக இஸ்ரேலுக்கும், ஹமாஸýக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை மிக மிக நெருக்கத்தில் உள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், வரும் திங்கள்கிழமை (மார்ச் 4) போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று நம்புகிறேன்.

அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், புனித ரமலான் மாதத்தில் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. இதன் மூலம், ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களில் மேலும் பலரை விடுவிப்பதற்கான அவகாசம் கிடைக்கும் என்றார் ஜோ பைடன்.

இதற்கிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக பிரான்ஸ் தயாரித்துள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர்தான் அதனை தற்போது பரிசீலித்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி "ராய்ட்டர்ஸ்' நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியது.

அந்த வரைவு ஒப்பந்தத்தில், காஸா பகுதியில் 40 நாள்களுக்கு அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்திவைக்கப்படுவது, ஹமாஸிடம் உள்ள ஒரு பிணைக் கைதிக்கு இஸ்ரேல் சிறைகளில் உள்ள 10 பாலஸ்தீன கைதிகள் என்ற விகிதத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்துகொள்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக "ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தங்கள் நாட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அனைத்து பிணைக் கைதிகளையும் ரமலான் மாதத் தொடக்கத்துக்குள் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்திருந்தது. மார்ச் 10-ஆம் தேதி வாக்கில் தொடங்கவிருக்கும் அந்தப் புனித மாதத்துக்குள் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், குண்டுவீச்சிலிருந்து தப்பி காஸாவின் லட்சக்கணக்கான மக்கள் கடைசியாக தஞ்சமடைந்துள்ள ராஃபா நகரில் தரைவழித் தாக்குதல் தொடங்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினர் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர். அத்துடன் சுமார் 240 பேரை அங்கிருந்து அவர்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

எனினும், போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

இன்னும் உறுதியாகவில்லை

காஸா போர் நிறுத்தம் குறித்து இன்னும் உறுதியாகவில்லை எனவும், அது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ள நம்பிக்கை மிகைப்படுத்தப்பட்டதாகவும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது: காஸா போர் நிறுத்தம் குறித்து பைடன் தெரிவித்துள்ள கருத்து மிகவும் அவசரத்தில் தெளிவில்லாமல் வெளியிடப்பட்டதாகும். அவரது கருத்து உண்மையான பேச்சுவார்த்தை நிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை.

போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது இன்னும் உறுதியாகவில்லை. இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பல அம்சங்களில் ஒருமித்த கருத்து ஏற்படவேண்டியுள்ளது என்று ஹமாஸ் அதிகாரிகள் கூறினர்.

இஸ்ரேல் அதிகாரிகளும், "பாரீஸில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை விவகாரத்தில் நாங்கள் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவில்லை. இந்தச் சூழலில், பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எட்டப்படும் என்று அதிபர் பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளது வியப்பை அளிக்கிறது' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com