
காஸாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கட்டடத்தை இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் குண்டுகள் மூலம் தகர்த்துள்ளது. இதன்மூலம் காஸாவில் 100க்கும் மேற்பட்ட கலாசார கட்டடங்களை சேதப்படுத்தி பாரம்பரிய இடங்களை அழித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸாவிலுள்ள ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் நடைபெற்று வருகிறது.
இந்தப்போரில் காஸா பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. இரண்டாம் தரை வழியாக காஸா எல்லைக்குள் நுழைந்து ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில், காஸாவில் 1,500 ஆண்டுகள் பழமையாக கட்டடத்தின்மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில், பாரம்பரியம் மிகுந்த கட்டடம் முழுவதும் சேதமடைந்ததாகவும் காஸா அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக மக்கள் கூடி தொழுகை நடத்திவந்த கலாசார கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காஸாவில் நூற்றுக்கும் அதிகமான கலாசார கட்டடங்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக காஸா தெரிவித்துள்ளது.
மத்திய காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ராக்கெட் தாக்குதலை நடத்துகிறது. காஸாவிலுள்ள மக்கள் அனைவரும் புலம்பெயர்ந்து செல்ல வேண்டும் என இஸ்ரேல் நிதித் துறை அமைச்சர் பெஸாலெல் ஸ்மோட்ரிச் அறிவுறுத்தியுள்ளார். காஸாவை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளதாகவும், இஸ்ரேல் ராணுவ முகாம்கள் அங்கு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.