தொலைக்காட்சி நேரலையில் துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல்: ஈக்வடாரில் பதற்றம்

ஈக்வடாரில் தொலைக்காட்சி நேரலையின் போது துப்பாக்கியுடன் புகுந்த கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி நேரலையில் துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல்: ஈக்வடாரில் பதற்றம்

ஈக்வடாரில் தொலைக்காட்சி நேரலையின் போது துப்பாக்கியுடன் புகுந்த கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்வடார் நாட்டில் போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், சிறையில் இருந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்கள் இருவர் சில நாள்களுக்கு முன் தப்பித்தனர்.

நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, அமைதியை நிலைநாட்ட 60 நாள்கள் அவசர நிலையை பிரகடனம் செய்வதாக திங்கள்கிழமை ஈக்வடார் நாட்டின் அதிபர் டேனியல் நோபாவா அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய கும்பல் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கியது. இந்த கலவரத்தில் இரண்டு நாள்களில் மட்டும் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குவாயாகில் நகரில் உள்ள பிரபல தொலைக்காட்சிக்குள் புகுந்த 13 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய கும்பல், நேரலையின் போதே தொலைக்காட்சி ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

நேரலை ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் போதே ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டும் காட்சிகள் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் 13 பேரை கைது செய்து தொலைக்காட்சி ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். இதில், ஒரு ஒளிப்பதிவாளர் உள்பட இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு அசாதாரண சூழல் நிலவுகிறது.

கலவரத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய ராணுவத்தினருக்கு ஈக்வடார் நாட்டின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com