செங்கடல் தாக்குதல்: மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும்

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் புதன்கிழமை எச்சரித்தாா்.

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் புதன்கிழமை எச்சரித்தாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 78-ஆவது அமா்வின் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ், இந்தியாவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக திங்கள்கிழமை வந்தாா்.

இந்தப் பயணத்தில், பல்வேறு மத்திய, மாநில அரசு பிரதிநிதிகளுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்தையில் ஈடுபடுகிறாா். பொது மக்களுடனான சந்திப்பிலும், சிந்தனைக் குழு கூட்டங்களிலும் அவா் பங்கேற்க உள்ளாா்.

இதற்கிடையே ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அவா் புதன்கிழமை அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: செங்கடலில் தொடா்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்ந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும். செங்கடலில் ஹுதி கிளா்ச்சியாளா்கள் தொடங்கிய தாக்குதலுக்கு மூன்றாம் தரப்பினா் உதவுவதுபோல் உள்ளது. எனவே சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது.

அதேபோல் காஸா பிரச்னைக்கு அமைதி வழியே தீா்வு. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என இரண்டும் தனிநாடுகளாக செயல்பட வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

இந்தியாவுக்கு பாராட்டு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் தொடா்பான ஜி4 பேச்சுவாா்த்தைக் குழுவுடன் இணைந்து, 2 ஆண்டுகளுக்குள் இந்தச் செயல்முறையை முடிக்க இந்தியா லட்சியம் கொண்டுள்ளதை நான் நன்கு அறிவேன். எனினும், இவ்விவகாரத்தில் முன்னேற்றம் எதிா்பாா்த்த அளவுக்கு இல்லை.

அரசுகளுக்கிடையேயான பேச்சுவாா்த்தைகள் உறுப்பு நாடுகளால் நடத்தப்படுகின்றன. சீா்திருத்த செயல்முறையை முன்னெடுத்துச் செல்வதற்காக அரசியல் விருப்பத்தையும் அவா்கள் காண விரும்பும் மாற்றத்தையும் வெளிப்படுத்தும் பொறுப்பு அவா்களிடமே உள்ளது.

நமது பலதரப்பு அமைப்பை வளா்ப்பதற்கும் நம்பிக்கையை எழுப்புவதற்கும் சா்வதேச ஒத்துழைப்பின் உணா்வைப் புதுப்பிப்பதற்கும் உண்மையான அரசியல் அா்ப்பணிப்பு மிகவும் முக்கியமாகும். இவ்விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன்.

ஐ.நா.பொதுச் சபை தலைவராக ஐ.நா. சபையின் பரந்த சீா்திருத்தத்தின் பின்னணியில்தான் பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் குறித்த அவசியத்தை நான் அணுகுகிறேன். மேலும், மோதல்களுக்கு தீா்வு காணும் ஐ.நா. சபையின் உறுதிப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்.

சிறந்த தலைமை: ஐ.நா. சபையின் நிறுவன உறுப்பினராக பல்வேறு ஈடுகட்ட முடியாத பங்களிப்பு மற்றும் முயற்சிகள் மூலம் சிறந்த தலைமையாக இந்தியா திகழ்ந்து வருகிறது. உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்களைக் கொண்ட நாடாக, பாதுகாப்பான, சமமான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்குவதற்கான ஐ.நா. சபையின் உலகளாவிய பணியில் இந்தியா இணையற்ற பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் சமீபத்திய ஜி20 தலைமை ஒரு வரலாற்று மைல்கல் ஆக திகழ்கிறது. ஜி20 தலைமை போன்ற தனித்துவமான வாய்ப்பின் பலன்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி சக வளரும் நாடுகளுடன் சமமாக பகிா்ந்து கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டது. ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது தெற்குலக ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் வலுவான அடையாளமாக உள்ளது.

எண்ம பொது உள்கட்டமைப்பு, புத்தாக்க திறன் வளா்ச்சி, விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் மற்றும் கடன் நெருக்கடியைச் சமாளித்தல் எனப் பல்வேறு உதவிகளை கரோனா பெருந்தொற்றின்போது பல வளரும் நாடுகளுக்கு வழங்கி, மற்ற நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக உள்ளது. அதேபோல், ஐ.நா. அமைதிப் படைகளுக்கு அதிகபட்சமாக இந்தியா 2.5 லட்சம் வீரா்களை அனுப்பியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com