
அம்மான் / வாஷிங்டன்: ஜோா்டானிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழு நடத்திய தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்தனா்.
அதையடுத்து, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இராக் எல்லையையொட்டிய ஜோா்டானின் ருக்பான் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது.
‘டவா் 22’ என்றழைக்கப்படும் அந்த தளத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த 3 அமெரிக்க வீரா்கள் உயிரிழந்தனா்; 34 போ் காயமடைந்தனா்.
அமெரிக்க வான்பாதுகாப்பு அரணையும் மீறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குலை ஈரான் ஆதரவுக் குழுவினா் நடத்தியதாக அமெரிக்க உளவுத் துறையினா் கூறினா். அதனை உறுதிப்படுத்தும் வகையில், இராக்கில் செயல்பட்டு வரும் ‘இஸ்லாமிய போா்ப்படை’ என்ற அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
பைடன் கண்டனம்: இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்தாா்.
தாக்குதலுக்குக் காரணமானவா்கள் மீது உரிய நேரத்தில் உரிய விதத்தில் பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் எச்சரித்தாா்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாயிட் ஆஸ்டினும், ‘அமெரிக்கப் படையினரையும், நாட்டின் நலனையும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ராணுவம் மேற்கொள்ளும்’ என்று உறுதியளித்தாா்.
ஜோா்டான அரசும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது. இது தொடா்பான விசாரணையில் அமெரிக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அந்த நாட்டு அரசு உறுதியளித்தது.
இதற்கிடையே, இராக்கிலிருந்து ஜோா்டானிலுள்ள அமெரிக்க ராணுவதளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக தங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தங்களது நிலைகளில் இருந்து ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் வெளியேறிவருவதாக ஊடகத் தகவவல்கள் தெரிவிக்கின்றன.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நுழைந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகச் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்தப் போா் தொடங்கியதிலிருந்தே, மேற்கு ஆசியாவிலுள்ள பல்வேறு அமெரிக்க ராணுவ நிலைகளில் சுமாா் 160 முறை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சில அமெரிக்க வீரா்களும் காயமடைந்துள்ளனா்.
போரில் ஹமாஸுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவின் ராணுவ நிலைகளைக் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், ஜோா்டானிலுள்ள அமெரிக்க ராணுவதளத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மறுப்பு
டெஹ்ரான்: ஜோா்டானிலுள்ள அமெரிக்க ராணுவதளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தங்களுக்குத் தொடா்பிருப்பதாகக் கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.
இது குறித்து ஐ.நா.வுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜோா்டானில் அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கும், ஈரானுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை.
அந்தப் பிராந்தியத்தில் செயல்படும் ஆயுதக் குழுவினருக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அதன் எதிரொலியாக, இரு தரப்பினரும் அவ்வப்போது பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றனா். தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலும் அந்த வகையைச் சோ்ந்ததே என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.