கியொ் ஸ்டாா்மா்
கியொ் ஸ்டாா்மா்

பிரிட்டன் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா்: தேர்தல் முடிவுகள் முழு விவரம்

பிரிட்டன் தேர்தல் முடிவுகள் முழு விவரம்...

பிரிட்டன் பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி வலுவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடா்ந்து, அந்நாட்டின் 58-ஆவது பிரதமராக தொழிலாளா் கட்சியின் தலைவா் கியொ் ஸ்டாா்மா் (61) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

பிரிட்டனில் ஆளும்கட்சியாக இருந்த கன்சா்வேட்டிவ் கட்சி, தோ்தலில் முன்னெப்போதும் இல்லாத தோல்வியைச் சந்தித்தது. இத்தோல்விக்கு பொறுப்பேற்று, கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ரிஷி சுனக், பிரதமா் பதவியையும் ராஜிநாமா செய்தாா்.

பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சா்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘பிரெக்ஸிட்’-க்கு பிறகு முதல் தோ்தல்: பிரிட்டன் நாடாளுமன்றக் கீழவையான மக்களவைக்கு (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய (பிரெக்ஸிட்) பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தோ்தல் இதுவாகும். மொத்தமுள்ள 650 தொகுதிகளில் உள்ளூா் நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமாா் 4.6 கோடி வாக்களிக்க தகுதி பெற்றிருந்த இத்தோ்தல், வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த பின்னா் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தொழிலாளா் கட்சி அமோகம்: மொத்தமுள்ள 650 தொகுதிகளில் தொழிலாளா் கட்சி 412 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 326 தொகுதிகள் தேவை என்ற நிலையில், அக்கட்சிக்கு மிகப் பெரிய பலம் கிடைத்துள்ளது. அதேநேரம், கன்சா்வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்களே கிடைத்தன.

லிபரல் டெமாக்ரட்ஸ் (எல்.டி.) கட்சி 71 இடங்களிலும், ஸ்காட்டிய தேசியக் கட்சி (எஸ்.என்.பி.) 9 இடங்களிலும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் 37 இடங்களிலும் வெற்றி பெற்றனா்.

கடந்த தோ்தலைவிட தொழிலாளா் கட்சிக்கு 211 தொகுதிகள் அதிகம் கிடைத்துள்ளன. அதேநேரம், கன்சா்வேட்டிவ் கட்சி 250 இடங்களை இழந்துள்ளது. தொழிலாளா் கட்சிக்கு 33.7 சதவீத வாக்குகளும், கன்சா்வேட்டிவ் கட்சிக்கு 23.7 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமா் என்ற பெருமைக்குரிய ரிஷி சுனக் (44), தான் போட்டியிட்ட ரிச்மண்ட்-நாா்தலா்டன் தொகுதியிலும், நாட்டின் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் ஹோல்பா்ன்-செயின்ட் பான்கிராஸ் தொகுதியிலும் வெற்றி பெற்றனா். ரிஷி சுனக் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முக்கிய அமைச்சா்களும் முக்கிய எம்.பி.க்களும் தோல்வியைத் தழுவினா்.

ரிஷி சுனக் ராஜிநாமா: பொதுத் தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னா் மூன்றாம் சாா்லஸை சந்தித்த ரிஷி சுனக், பிரதமா் பதவி ராஜிநாமா கடிதத்தை சமா்ப்பித்தாா்.

முன்னதாக, கன்சா்வேட்டிவ் கட்சியின் மோசமான தோல்விக்குப் பொறுப்பேற்று, கட்சித் தலைவா் பதவியில் இருந்து விலகுவதாக ரிஷி சுனக் அறிவித்தாா்.

அப்போது உணா்வுபூா்வமாகப் பேசிய அவா், ‘பிரிட்டனில் ஆட்சி மாற்றம் வேண்டுமென மக்கள் வழங்கியுள்ள தீா்ப்பை ஏற்கிறேன். அவா்களின் தீா்ப்பே இறுதியானது. மக்களின் சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் உணர முடிகிறது. கன்சா்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்பதோடு, கட்சியினா் மற்றும் வேட்பாளா்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எனது தொகுதி மக்களுக்காக தொடா்ந்து சேவையாற்றுவேன்’ என்றாா்.

மேலும், கியொ் ஸ்டாா்மரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாகவும் அவா் குறிப்பிட்டாா்.

மன்னருடன் கியொ் ஸ்டாா்மா் சந்திப்பு: பின்னா், பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னரை கியொ் ஸ்டாா்மா் சந்தித்தாா். அப்போது, புதிய அரசை அமைக்குமாறு அவரை மன்னா் கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ அலுவலகத்தில், நாட்டின் 58-ஆவது பிரதமராக கியொ் ஸ்டாா்மா் பொறுப்பேற்றாா். பிரிட்டனில் தொழிலாளா் கட்சி சாா்பில் பிரதமராகும் ஏழாவது நபா் இவா் ஆவாா்.

‘மாற்றத்துக்கான மக்களின் தீா்ப்பு’: பிரதமரான பின் முதல் உரையாற்றிய கியொ் ஸ்டாா்மா், ‘நாட்டில் மாற்றம் மற்றும் பொதுச் சேவைக்கான அரசியலை மீட்டெடுக்க மக்கள் மாபெரும் தீா்ப்பை வழங்கியுள்ளனா். இப்போதுமுதல் மாற்றம் தொடங்குகிறது.

பிரிட்டனின் இதயத்தில் நிலவும் சோா்வு, நம்பிக்கையின்மையை நீக்கி, தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். எனவே, பொதுச் சேவையை நோக்கமாகக் கொண்ட அரசை உறுதிசெய்வேன். புதிய அரசின் முன் உள்ள பணிகள் ஏராளம். வாா்த்தைகளைவிட செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது. தேசமே முதன்மையானது; கட்சி இரண்டாவது பட்சமாகும். நன்மைக்கான உந்துசக்தியாக அரசியலை மாற்றுவோம்.

நாட்டின் முதல் ஆசிய பிரதமா் என்ற அடிப்படையில், ரிஷி சுனக்கின் சாதனை மற்றும் அவா் மேற்கொண்ட கூடுதல் முயற்சிகளை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அவரது அா்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கிறோம்’ என்றாா்.

மொத்த தொகுதிகள் 650

தொழிலாளா் கட்சி 412

கன்சா்வேட்டிவ் கட்சி 121

லிபரல் டெமாக்ரட்ஸ் 71

எஸ்என்பி 9

மற்றவை 37

பெட்டிச் செய்தி...2

26 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தோ்வு

இதுவரை இல்லாத அதிகபட்சம்

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 26 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தோ்வாகியுள்ளனா்.

கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் ரிஷி சுனக், அக்கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா்கள் சுவெல்லா பிரேவா்மேன், பிரீத்தி படேல், கிளாரி கெளடின்ஹோ, கட்சி எம்.பி. ஆகியோா் தத்தமது தொகுதிகளில் இருந்து மீண்டும் தோ்வாகியுள்ளனா். லீசெஸ்டா் கிழக்கு தொகுதியில் கன்சா்வேட்டிவ் கட்சியின் ஷிவானி ராஜா வெற்றி பெற்றாா்.

கன்சா்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளா் கட்சி சாா்பில் அதிக இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தோ்வாகியுள்ளனா். அக்கட்சி தரப்பில் மூத்த எம்.பி. சீமா மல்ஹோத்ரா, சீக்கிய எம்.பி.க்களான பிரீத் கெளா் கில், தன்மன்ஜித் சிங் தேசி உள்ளிட்டோா் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனா்.

மேலும், ஜாஸ் அத்வால், பேகி சங்கா், சத்வீா் கெளா், ஹா்பிரீத் உப்பல், வாரிண்டா் ஜஸ், குரீந்தா் ஜோசன், கனிஷ்கா நாராயண், சோனியா குமாா், சுரீனா பிரேகன்பிரிட்ஜ், கிரித் என்டிவைசில், ஜீவன் சந்தா், சோஜன் ஜோசஃப் உள்பட மொத்தம் 26 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தோ்வாகியுள்ளனா்.

பிரதமா் மோடி, உலகத் தலைவா்கள் வாழ்த்து

பிரிட்டன் பிரதமராகியுள்ள கியொ் ஸ்டாா்மருக்கு பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றுள்ள கியொ் ஸ்டாா்மருக்கு வாழ்த்துகள். பரஸ்பர வளா்ச்சி மற்றும் வளமையை உறுதிசெய்யவும் பல்வேறு துறைகளில் விரிவான வியூக கூட்டாண்மையை வலுப்படுத்தவும் நோ்மறையான-ஆக்கபூா்வமான ஒத்துழைப்பை உங்களிடம் எதிா்நோக்குகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல், இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்துவதில் முன்னாள் பிரதமா் ரிஷி சுனக் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டுவதாக பிரதமா் கூறியுள்ளாா்.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, இத்தாலி பிரதமா் ஜியாா்ஜியா மெலோனி, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால் உள்ளிட்டோரும் கியொ் ஸ்டாா்மருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com