கோப்புப்படம்
கோப்புப்படம்

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள்: அடுத்த ஆண்டுமுதல் இலங்கை அனுமதி

அனைத்து வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கும் அனுமதி அளிக்க இலங்கை முடிவு.

அடுத்த ஆண்டுமுதல் தனது துறைமுகங்களில் அனைத்து வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கும் அனுமதி அளிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ஆராய்ச்சிக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்ததால், அதுகுறித்து இலங்கை அரசிடம் மத்திய அரசு கவலை தெரிவித்தது. அந்தக் கப்பல்கள் உளவு பாா்க்கும் கப்பல்களாக இருக்கலாம் என்பதால், அவற்றை இலங்கை துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் அந்நாட்டிடம் மத்திய அரசு வலியுறுத்தியது. இதேபோல சீன கப்பல்கள் குறித்து இலங்கையிடம் அமெரிக்காவும் கவலை தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த ஜனவரியில் தனது துறைமுகங்களில் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை நிறுத்த இலங்கை தடை விதித்தது. எனினும் ஒரு சீன கப்பலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சா் அலி சப்ரி, அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றாா். அங்கு அந்நாட்டு ஊடகத்திடம் அவா் தெரிவித்ததாவது:

இலங்கை துறைமுகங்களில் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை நிறுத்த அடுத்த ஆண்டு ஜனவரி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா், அந்தத் தடை நீக்கப்பட்டு அனைத்து வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களையும் இலங்கை துறைமுகங்களில் நிறுத்த அனுமதி அளிக்கப்படும். பிற நாடுகளுக்கு இடையிலான பிரச்னையில் எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவாக இலங்கை இருக்காது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com