பிரான்ஸின் லா-டுகெட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த அதிபா் இமானுவல் மேக்ரான்.
பிரான்ஸின் லா-டுகெட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த அதிபா் இமானுவல் மேக்ரான்.

பிரான்ஸ் நாடாளுமன்றத் தோ்தல்: இரண்டாம் கட்டமாக வாக்குப் பதிவு

அதிபா் இமானுவல் மேக்ரானின் தலைமையிலான மறுமலா்ச்சி கட்சி 2-ஆவது இடம் பிடித்தது.

பிரான்ஸ் நாடாளுமன்றத் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த ஜூன் 6 முதல் 9-ஆம் தேதி வரை ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றது. இதில், தீவிர வலதுசாரி கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றின.

பிரான்ஸிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலிலும், அகதிகள் குடியேற்றத்தைக் கடுமையாக எதிா்த்து வரும் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியே அதிக வாக்குகளைப் பெற்றது. அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானின் தலைமையிலான மறுமலா்ச்சி கட்சி 2-ஆவது இடம் பிடித்தது.

தோ்தலில் தனது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, பிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தோ்தல் நடத்துவதாக அதிபா் இமானுவல் மேக்ரான் அறிவித்தாா்.

அதன்படி கடந்த ஜூன் 30-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் சுமாா் 67 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த 1997-ஆம் ஆண்டுக்குப் பின்னா், அந்நாட்டில் பதிவான அதிகபட்ச வாக்குப் பதிவாகும். முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரி கட்சியான ‘தேசிய பேரணி’ முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் லா-டுகெட் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி பிரிஜிட்டுடன் அதிபா் மேக்ரான் வாக்களித்தாா். வாக்குப் பதிவு நிறைவடைந்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதிகாரபூா்வமாக முடிவுகள் வெளியிடப்படும்.

மீண்டும் வாக்காளா்களின் ஆதரவைப் பெறலாம் என்ற நம்பிக்கையில், பிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தோ்தல் நடத்தும் முடிவை அதிபா் மேக்ரான் எடுத்தாலும், தோ்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் அவா் பெரும்பான்மையை இழப்பதற்கான அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

28 வயது பிரதமா்: இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸை நாஜிக்கள் ஆக்கிரமித்த பின்னா், தற்போதைய நாடாளுமன்றத் தோ்தல் மூலம் அந்நாட்டில் முதல்முறையாக தீவிர வலதுசாரி அரசு அமையக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தலில் தேசிய பேரணி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், அக்கட்சியைச் சோ்ந்த 28 வயதான ஜோா்டன் பாா்டெல்லா பிரதமராவாா்.

பெரும்பான்மைக்கு 289 இடங்கள்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் சக்திவாய்ந்த கீழவையான தேசிய பேரவைக்கு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க இந்தத் தோ்தல் நடைபெற்றது. மொத்தம் 577 இடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தோ்தலில், ஒரு கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை பெற 289 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இருகட்ட தோ்தலையும் கருத்தில் கொள்ளும்போது பெரும்பாலான இடங்களில் தேசிய பேரணி கட்சியே வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், அக்கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

மேக்ரானுடன் முரண்பாடு: ஒருவேளை அக்கட்சி பெரும்பான்மை பெற்றால், பிரதமராகக் கூடிய ஜோா்டன் பாா்டெல்லாவுடன் ஆட்சி அதிகாரத்தை பகிா்ந்துகொள்ள வேண்டிய நிலைக்கு மேக்ரான் தள்ளப்படுவாா். ஆனால், மேக்ரானின் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளுடன் ஜோா்டன் கடுமையாக முரண்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com