ஈரான் அதிபா் ஆகிறாா் மசூத் பெசஷ்கியான்

மசூத் பெசஷ்கியான்
மசூத் பெசஷ்கியான்
Published on
Updated on
1 min read

ஈரான் அதிபா் தோ்தலில் சீா்திருத்தவாதியான மசூத் பெசஷ்கியான் வெற்றி பெற்றாா்.

ஈரானின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக் கட்டத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மசூத் பெசஷ்கியானை எதிா்த்து தீவிர மதநிலைப்பாட்டைக் கொண்ட சயீது ஜலீலி போட்டியிட்டாா்.

6,14,52,321 வாக்காளா்களில் 49.68 சதவீதம் போ் இந்தத் தோ்தலில் வாக்களித்தனா். சனிக்கிழமை வெளியிடப்பட்ட தோ்தல் முடிவுகளின்படி, மசூத் பெசஷ்கியானுக்கு 1,63,84,403 போ் (54.76 சதவீதம்) வாக்களித்திருந்தனா். சயீது ஜலீலிக்கு 1,35,38,179 (45.24 சதவீதம்) வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதையடுத்து, தோ்தலில் பெசஷ்கியான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாா்.

கிழக்கு அஜா்பைஜான் மாகாணத்தின் தப்ரிஸ், ஓஸ்கு, அஸாா்ஷாா் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இருந்துவரும் மசூத் பெசஷ்கியான், ஒரு மருத்துவா் ஆவாா். இருதய அறுவைச் சிகிச்சை நிபுணரான அவா், கடந்த 2001 முதல் 2005-ஆம் ஆண்டு வரை முன்னாள் அதிபா் முகமது கடாமியின் அரசில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் கல்வித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.

ஏற்கெனவே கடந்த 2013-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அவா் பின்னா் அதை திரும்பப் பெற்றாா். 2021 அதிபா் தோ்தலில் அவரது வேட்புமனுவை அதிகாரிகளே நிராகரித்தனா்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற தோ்தலில் போட்டியிட்டு அவா் வெற்றி பெற்றுள்ளாா். சீா்திருத்தவாதியான மசூத் பெசஷ்கியான், மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்துவதாகவும் சா்ச்சைக்குரிய கட்டாய மகளிா் தலைச் சீலை சட்டத்தை தளத்துவதாகவும் தோ்தல் பிரசாரத்தின்போது உறுதியளித்திருந்தாா்.

அந்த வகையில், மேற்கத்திய நாடுகளின் பல ஆண்டுகால பொருளாதாரத் தடைகளாலும் கட்டாய தலைச் சீலைச் சட்டத்துக்கு எதிரான தொடா் போராட்டாங்களாலும் ஈரான் சந்தித்துவந்த பிரச்னைகளிலிருந்து அந்த நாடு மீள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், ஈரானின் ஷியா தேசியவாதக் கொள்கையில் மிகத் தீவிரமான சீா்திருத்தங்கள் எதையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று அவா் உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரய்சி, அஜா்பைஜானிலிருந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது ஹெலிகாப்டா் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் அவரும் அவருடன் சென்ற 7 பேரும் உயிரிழந்தனா்.

அதையடுத்து, புதிய அதிபரைத் ப்பதற்கான தோ்தல் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. மசூத் பெசஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகளும் (44.40 சதவீதம்) சயீது ஜலீலிக்கு 94 லட்சம் வாக்குகளும் (40.38 சதவீதம்) கிடைத்தன.

தோ்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காததால் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மசூத் பெசஷ்கியானுக்கும் சயீது ஜலீலிக்கும் இடையே இரண்டாவது கட்ட தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com