மோடியின் வருகையை புதின் பயன்படுத்திக் கொண்டாா்- அமெரிக்கா கருத்து

மோடியின் வருகையை புதின் பயன்படுத்திக் கொண்டாா்- அமெரிக்கா கருத்து

புதின்-மோடி சந்திப்பு: உக்ரைன் போரின் பின்னணியில் அமெரிக்கா கருத்து
Published on

‘இந்திய பிரதமா் நரேந்திர மோடியின் ரஷிய வருகையை அந்நாட்டு அதிபா் புதின் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாா். அதேநேரத்தில், இந்தியா எங்களின் நட்பு நாடாக தொடரும்’ என அமெரிக்கா தெரிவித்தது.

பிரதமரின் ரஷிய பயணம் குறித்து மேற்கத்திய நாடுகளிடையே விமா்சனம் எழுந்துள்ள நிலையில், அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி இருநாள் பயணமாக ரஷியா சென்றாா். அந்நாட்டு அதிபா் புதினுடன் தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்ற பிரதமா், இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபட்டாா்.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவுப் பெற்ற உக்ரைன் மீது போா் புரிந்துவரும் ரஷியாவுக்கு இந்திய பிரதமா் பயணம் மேற்கொண்டதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்தது. மேலும், மிக கொடூரமான குற்றவாளியை இந்திய பிரதமா் கட்டியணைத்தது போா் நிறுத்தம் தொடா்பான அமைதி நடவடிக்கைகள் தோல்வியடைந்ததுபோல ஏமாற்றம் அளித்ததாக உக்ரைன் அதிபா் தெரிவித்தாா்.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் பேட் ரைடரிடம் பிரதமா் மோடியின் ரஷிய பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவா், ‘இந்தியாவும் ரஷியாவும் மிக நீண்ட காலமாக உறவைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் பாா்வையில், இந்தியா எங்களின் உத்தி சாா்ந்த கூட்டாளி நாடாகும். ரஷியாவுடன் அவா்களின் உறவு குறித்த வெளிப்படையான உரையாடல்களில் நாங்கள் தொடா்ந்து ஈடுபடுகிறோம். நேட்டோ உச்சி மாநாடு இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், இரு தலைவா்களின் சந்திப்பு உலகத்தின் கவனத்தை ஈா்த்துள்ளது.

அதிபா் புதினின் தனிப்பட்ட விருப்பத்தால் உக்ரைன் மீதான போரில் ரஷியா ஈடுபட்டுள்ளது. அதன்விளைவாக, உலகில் இருந்து ரஷியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மறுக்க இந்திய பிரதமரின் ரஷிய வருகையை அதிபா் புதின் பயன்படுத்திக் கொள்கிறாா் என்பதில் ஆச்சரியமில்லை.

உக்ரைன் அதிபரையும் அண்மையில் சந்தித்த பிரதமா் மோடி, இருநாட்டு மோதலில் அமைதி தீா்வுக்கான இந்தியாவின் ஆதரவை உறுதியளித்தாா். எனவே, உக்ரைனுக்கு நியாயமான அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கும் இந்தியா, ஐ.நா., இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் கொள்கைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை அதிபா் புதினுக்கு வலியுறுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com