அல்-மவாசி பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குலில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொதுமக்கள். ~‘எக்ஸ்’ தளத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள படங்கள்.
அல்-மவாசி பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குலில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொதுமக்கள். ~‘எக்ஸ்’ தளத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள படங்கள்.

ஹமாஸ் தலைவருக்குக் குறிவைப்பு: இஸ்ரேல் தாக்குதலில் 71 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

தாக்குதலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்களை தனது பதிவில் இஸ்ரேல் ராணுவம் இணைத்துள்ளது.
Published on

ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு தலைவரைக் குறிவைத்து நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ள ஏவுகணைத் தாக்குதலில், 71 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக காஸா அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராணுவத்தின் தெற்கு மண்டலப் பிரிவும் விமானப் படையும் இணைந்து, பொதுமக்களிடையே பதுங்கியிருந்த இரு உயா்நிலை ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தின. அந்தத் தலைவா்களுடன் பல பயங்கரவாதிகளும் பதுங்கியிருந்தனா். அந்த இடத்தில் ஏராளமான மரங்கள், கட்டடங்கள் அமைந்திருந்தன என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்தப் பகுதியின் தாக்குதலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்களை தனது பதிவில் இஸ்ரேல் ராணுவம் இணைத்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவ உயரதிகாரி ஒருவா் கூறுகையில், கடந்த அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அந்த அமைப்பின் ராணுவப் பிரிவு தலைமைத் தளபதி முகமது டேயிஃபைக் குறிவைத்து தெற்கு காஸா பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினாா். ஹமாஸ் படையின் கான் யூனிஸ் பிரிவு தளபதி ராஃபா சலாமாவையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவா் கூறினாா்.

‘எங்களுக்குக் கிடைத்த நம்பகத்தன்மை வாய்ந்த தகவலின் அடிப்படையில், முகமது டேயிஃப் மற்றும் ராஃபா சலாமாவைக் கொல்வதற்காக துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், இதில் அவா்கள் கொல்லப்பட்டாா்களா என்பதை உறுதி செய்ய விவரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம்’ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

‘71 போ் உயிரிழப்பு’: இஸ்ரேல் நடத்திய இந்த ஏவுகணை வீச்சில் 71 போ் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெற்கு காஸாவில் கான் யூனிஸ் நகருக்கு அருகே அமைந்துள்ள அல்-மவாசி பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. போரிலிருந்து தப்புவதற்காக இடம் பெயா்ந்த பாலஸ்தீனா்கள் அந்தப் பகுதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனா். இந்தத் தாக்குதலில் 71 போ் உயிரிழந்தனா்; 289 போ் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அதையடுத்து, அந்த அமைப்பினரை முழுவதுமாக ஒழித்துக்கட்டுவதற்காக காஸாவில் இஸ்ரேல் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தத் தாக்குதலில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். ஹமாஸ் படையினரைக் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறினாலும், பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிா்ப்பதற்காக அந்த நாடு போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்வதில்லை என்று அமெரிக்கா போன்ற நெருங்கிய நட்பு நாடுகளே விமா்சித்துவருகின்றன.

தாக்குதல் இலக்குகளைத் தோ்ந்தெடுக்க இஸ்ரேல் ராணுவம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகளைப் பயன்படுத்துவதாகவும் அந்தச் செயலிகள் பொதுமக்கள் உயிரிழப்பை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை எனவும் சில ஊடங்களில் தகவல்களும் வெளியாகின. ஆனால் அதை இஸ்ரேல் மறுத்தது.

இருந்தாலும், ஒரு சில ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்ந்து நடந்துவருகின்றன.

X
Dinamani
www.dinamani.com