டிரம்பை சுட்டது 20 வயது இளைஞரா? - என்ன நடந்தது!

முன்னாள் அதிபர் டிரம்ப் சுடப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
டிரம்பை சுட்டது 20 வயது இளைஞரா? - என்ன நடந்தது!
Published on
Updated on
2 min read

20 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் காயமடைந்தார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வருகிற நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் இன்று (ஜூலை 14) காலையில் தேர்தல் பிரசாரம் நடத்தினார்.

அப்போது டொனால்ட் டிரம்ப் மீது, 20 வயது இளைஞரான தாமஸ் மேத்யூ, அந்தப் பகுதியில் இருந்த ஒரு கூரையின் மீது இருந்தவாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் டிரம்ப்பின் வலது காதின் மேற்புறத்தில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தாமஸை டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

இதனையடுத்து, டிரம்ப் உடனடியாக அந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், இந்த சம்பவத்தில் டிரம்ப்பின் ஆதரவாளர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த இளைஞர் நடத்திய தாக்குதல் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், துப்பாக்கிகளைப் பற்றி விளக்கும் பிரபல யூடியூப் பக்கத்தில் விற்பனை செய்யப்படும் டி-சர்ட்டை, அந்த இளைஞர் அணிந்து வந்துள்ளார் என்பது மட்டும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பராக் ஒபாமா, பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, ``பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்தேன். அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், நன்றாக இருப்பதாகவும் கேள்விப்பட்டு மகிழ்ச்சியுற்றேன். அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும், பிரசாரத்தில் பங்கேற்ற அனைவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். அமெரிக்காவில் இத்தகைய வன்முறைக்கு இடமில்லை. இதுபோன்ற வன்முறையைக் கண்டிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் எக்ஸ் பக்கத்தில் கூறுவதாவது, ``நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை. என்ன நடந்தது என்று எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை; இருப்பினும், முன்னாள் அதிபர் டிரம்ப் தீவிரமாக காயமடையவில்லை என்பதில் நாம் அனைவரும் நிம்மதி அடைய வேண்டும். அவர் விரைவில் குணமடைய நானும் எனது மனைவியும் பிரார்த்தனை செய்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிகார சபையின் உறுப்பினர் சக் ஸூமர் கூறியதாவது, ``பென்சில்வேனியாவின் பிரசாரத்தில் நடந்ததை அறிந்து நான் திகிலடைந்தேன். முன்னாள் அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு நிம்மதியடைகிறேன். அரசியல் வன்முறைக்கு நம் நாட்டில் இடமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது, ``எனது நண்பரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலை அறிந்து மிகுந்த கவலையடைகிறேன். இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. மேலும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன” என்று கூறியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எக்ஸ் பக்கத்தில், ``அதிபர் டிரம்ப்பின் பிரசாரத்தில் நடந்த காட்சிகளால் நான் அதிர்ச்சியடைந்தேன். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரார்த்தனை செய்கிறோம். எந்தவொரு அரசியல் வன்முறைக்கும் நமது சமூகங்களில் இடமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com