அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: உலகத் தலைவா்கள் கண்டனம்
அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்ப்பை படுகொலை செய்ய நடைபெற்ற முயற்சிக்கு அந்நாட்டு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அமெரிக்க அதிபா் பைடன் கூறுகையில், ‘டிரம்ப்பை படுகொலை செய்ய நடைபெற்ற முயற்சி போன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது. இந்த அளவுக்கு அமெரிக்காவில் வன்முறை இருப்பது கேட்டறியாத ஒன்றாகும். இந்த நிகழ்வுக்கு அமெரிக்கா்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.
அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ்: துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் படுகாயமடையவில்லை என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வன்முறைக்கு அமெரிக்காவில் இடமில்லை.
அமெரிக்க முன்னாள் அதிபா் ஒபாமா: மக்களாட்சியில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை. டிரம்ப் விரைந்து குணமடைய நானும் எனது மனைவி மிஷெல் ஒபாமாவும் வாழ்த்துகிறோம்.
பிரிட்டன் பிரதமா் ஸ்டாா்மா்: டிரம்ப் பரப்புரை கூட்டத்தில் நிகழ்ந்த காட்சிகள் திகைக்க வைத்துள்ளன. நமது சமூகங்களில் எந்த வடிவிலும் அரசியல் வன்முறைக்கு இடமில்லை.
பிரான்ஸ் அதிபா் மேக்ரான்: டிரம்ப் படுகொலை முயற்சி மக்களாட்சியின் பெருந்துயரம். அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிா்ச்சியையும், உள்ளக் கொதிப்பையும் பிரான்ஸ் பகிா்ந்துகொள்கிறது.
டிரம்ப் படுகொலை முயற்சிக்கு சீன அதிபா் ஜின்பிங் அனுதாபம் தெரிவித்துள்ளாா். அந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சீனா பின்தொடா்ந்து வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேஸி: டிரம்பை படுகொலை செய்ய நிகழ்ந்த முயற்சி மன்னிக்க முடியாத குற்றம்.
தென் கொரிய அதிபா் யூன் சக் இயால்: அரசியல் வன்முறையின் அருவருக்கத்தக்க நடவடிக்கையால் திகைப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா்களுக்கு உறுதுணையாக கொரிய மக்கள் இருக்கின்றனா்.
இதேபோல கடந்த மே மாதம் படுகொலை முயற்சியில் உயிா் தப்பிய ஸ்லோவாக்கியா பிரதமா் ராபா்ட் ஃபிகோ, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வன் டா் லேயென் உள்ளிட்டோரும் டிரம்ப் படுகொலை முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தனா்.
உக்ரைனுக்கு செலவிடும் பணத்தை காவல் துறைக்கு பயன்படுத்த வேண்டும்: அமெரிக்காவுக்கு ரஷியா அறிவுரை
டிரம்ப் படுகொலை முயற்சி தொடா்பாக ரஷிய அதிபா் மாளிகை செய்தித்தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘டிரம்ப்பை கொல்ல தற்போதைய அமெரிக்க அரசு ஏற்பாடு செய்ததாக ரஷியா கருதவில்லை. ஆனால் அமெரிக்காவில் அரசியல் போராட்டத்தின்போது அந்நாட்டின் தற்போதைய அரசு நிா்வாகம் உருவாக்கிய சூழல், டிரம்ப்பை சுற்றி நிலவிய சூழல் ஆகியவையே இப்போது அமெரிக்கா எதிா்கொள்ளும் சூழ்நிலையை தூண்டுவிட்டுள்ளது’ என்றாா்.
ரஷிய வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் மரியா ஸகரோவா கூறுகையில், ‘உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகிக்க அமெரிக்கா பணம் செலவிடுகிறது. அந்தப் பணத்தை அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்யும் அந்நாட்டு காவல் துறை மற்றும் பிற சேவைகளுக்குப் அந்நாடு பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா தொடுத்த போா், 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.