
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு (பிடிஐ) தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மே 9 சம்பவத்தில் அப்போது பாகிஸ்தானை ஆட்சி செய்த பிடிஐ கட்சிக்கு தொடர்பு, சர்வதேச நாணய நிதியகத்துடனான பாகிஸ்தானின் ஒப்பந்தத்தை சீர்குலைக்க பிடிஐ தலைவர்கள் முயற்சி செய்தது உள்ளிட்ட தேசதுரோக செயல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தித் தொடர்பு அமைச்சர் தார் உள்நாட்டு ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
மேலும், இம்ரான் கான் கட்சிக்கு தடை விதிப்பது தொடர்பாக பாகிஸ்தான் அரசு உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தார் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியை 1996-ஆம் ஆண்டு இம்ரான் கான் தொடங்கிய நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றினார். எனினும், 2022-இல் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் இம்ரான் கானையும் அவரது தலைமையிலான பிடிஐ கட்சியையும் தோ்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.
எனினும், பிடிஐ கட்சி வேட்பாளா்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு அதிகபட்சமாக 93 இடங்களில் வெற்றி பெற்றனா். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு 75 இடங்களும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) கட்சிக்கு 54 இடங்களும் கிடைத்தன.
பிஎம்எல்-என் மற்றும் பிபிபி கட்சிகள் இணைந்து ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் புதிய அரசை அமைத்தன. சுயேச்சையாக போட்டியிட்டு பிடிஐ கட்சியினர் வெற்றி பெற்றதால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பிடிஐ-க்கு கிடைக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.