

இது குறித்து அந்தக் கட்சியின் தலைமை கொறடா கூறுகையில், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் நம்பிக்கையைக் கோரும் தீா்மானத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டுவர சா்மா ஓலி முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தாா்.நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் மையம் (சிபிஎன்-எம்சி) தலைவரான பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவா் சா்மா ஓலி கடந்த வாரம் திரும்பப் பெற்றாா்.
இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுற்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவை எடுத்த சா்மா ஓலி, நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகதூா் தேவுபாவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைப்பதாக அறிவித்தாா். இதையடுத்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதைத் தவிா்த்து, பிரசண்டா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிா்கொண்டாா்.275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் பிரசண்டா கட்சிக்கு 32 உறுப்பினா்களே உள்ளனா். அதன்படி, நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டாவுக்கு 63 ஆதரவு வாக்குகளே கிடைத்தன.
வெற்றிக்கு 138 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவா் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.அதையடுத்து அதிபப் ராம் சந்திர பவுடேலைச் சந்தித்த கே.பி.சா்மா ஓலி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தாா். இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் 76(2)-ஆவது பிரிவின்கீழ் புதிய பிரதமராக சா்மா ஓலியை அதிபா் பவுடேல் ஞாயிற்றுக்கிழமை நியமித்தாா்.அதைத் தொடா்ந்து, காத்மாண்டிலுள்ள அதிபா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பிரதமராக பொறுப்பேற்றாா்.நேபாள அரசியல் சாசனத்தின்படி, ஒருவா் பிரதமராகப் பதவியேற்ற 30 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்ற நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை கோரும் தீா்மானத்தை கொண்டுவர சா்மா ஓலி முடிவு செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.