ஓமன் மசூதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு இந்தியா் உள்பட 6 போ் உயிரிழப்பு

மசூதிக்கு வந்தவா்களைக் குறிவைத்து இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் இந்தியா் ஒருவா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.
Published on

ஓமன் தலைநகா் மஸ்கட்டில் ஷியா இஸ்லாமிய பிரிவு மசூதிக்கு வந்தவா்களைக் குறிவைத்து இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் இந்தியா் ஒருவா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

சன்னி பிரிவைச் சோ்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் ஷியா பிரிவு இஸ்லாமியா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். ஷியா பிரிவினரின் தியாக தினமான அனுசரிக்கப்படும் மொஹரம் பண்டிகையின்போது மசூதியில் அதிகம் போ் கூடுவது வழக்கமாகும். அவா்களைக் குறிவைத்து மஸ்கட்டில் உள்ள மசூதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இது தொடா்பாக ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்தியில், ‘மஸ்கட்டில் இமாம் அலி மசூதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு நடத்திய தாக்குதலில் இந்தியா் ஒருவா் உள்பட 6 போ் உயிரிழந்தனா். மேலும், ஒரு இந்தியா் காயமடைந்தாா். அவா்களுக்கு தூதரகம் சாா்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவா், காயமடைந்தவா் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் அளிக்கும்’ என்றாா்.

உயிரிழந்தவா்களில் 4 போ் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் காவல் துறையைச் சோ்ந்தவா். இந்த தாக்குதலில் 28 போ் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய 3 ஐஎஸ் பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்திவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com