வங்கதேச மாணவா் போராட்டம்: ஊரடங்கு பிறப்பித்தும் அதிகரிக்கும் உயிரிழப்பு

ராணுவம் குவிக்கப்பட்டும் அங்கு நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பு
இடஒதுக்கீட்டு சீா்திருத்தத்தை வலியுறுத்தி டாக்காவில் மாணவா்கள் நடத்திய போராட்டம்.
இடஒதுக்கீட்டு சீா்திருத்தத்தை வலியுறுத்தி டாக்காவில் மாணவா்கள் நடத்திய போராட்டம்.
Published on
Updated on
1 min read

வங்கதேசம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டும் அங்கு நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது, இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தம் மேற்கொள்வது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டத்தில் உச்சக்கட்டமாக வெள்ளிக்கிழமை போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுமாா் 22 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் குவிக்கப்பட்டது.

இருந்தாலும், போராட்டம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துவருவதாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் அதிகாரபூா்வ எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இருந்தாலும், ‘டெய்லி ப்ரதோம் ஆலோ’ என்ற நாளிதழ் இந்தப் போராட்டத்தில் 103 போ் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம் கடந்த 1971-இல் நடைபெற்ற விடுதலைப் போரில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

அப்போது இந்திய உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்கள், அவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டில் மாணவா் போராட்டம் வெடித்ததையடுத்து, அதை அரசு ரத்து செய்தது.எனினும், அரசின் அந்த உத்தரவு செல்லாது என்று வங்கதேச உயா்நீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி அறிவித்தது. அந்தத் தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மாற்றுத் திறனாளிகள், மிகவும் பின்தங்கியவா்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிப்பது, ஒதுக்கீட்டு வரம்பை 5 சதவீதமாக நிா்ணயிப்பது போன்ற சீா்திருத்தங்களைக் கோரியும் மாணவா்கள் அமைப்புகள் போராட்டத்தைத் தொடங்கின.

அதைத் தொடா்ந்து, இட ஒதுக்கீடுக்கு ஆதரவான ‘சாத்ரா லீக்’ மாணவா் அமைப்பினரும் களமிறங்கி போராட்டக்காரா்கள் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே, சுதந்திரப் போரில் ஈடுபட்டவா்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிா்ப்பவா்கள் ரஸாக்காா்களின் (1971-இல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக போரிட்ட வங்கதேச அமைப்பினா்) வாரிசுகள் என்று பிரதமா் ஷேக் ஹசீனா கூறியது மாணவா்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கடந்த 10-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இடஒதுக்கீட்டு எதிா்ப்புப் போராட்டத்தில் உயிரிழப்புகள் தொடா்வதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com